விஜய்யின் ‘ஜனநாயகன்’ முதல் நாள் வசூல் எவ்வளவு?

நடிகர் விஜய்யின் 69வது திரைப்படமான ‘ஜனநாயகன்’ உலகம் முழுவதும் நேற்று திரையரங்குகளில் வெளியானது. எச். வினோத் இயக்கியுள்ள இப்படம், முதல் நாளிலேயே இந்தியாவில் ரூ.41 கோடி நிகர வசூல் ஈட்டியுள்ளதாக வர்த்தக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

கே.வி.என். புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இந்தப் படம் சுமார் ரூ.500 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ளது. இதில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு உள்ளிட்டோர் நடித்துள்ள நிலையில், அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார்.

வர்த்தக கண்காணிப்பு தகவலின்படி, 13,067 காட்சிகள் மூலம் இந்தியாவில் ரூ.41 கோடி நிகர வசூலும், ரூ.48.27 கோடி மொத்த (Gross) வசூலும் கிடைத்துள்ளது. வெளிநாடுகளில் ரூ.30 கோடி வசூலித்ததன் மூலம், உலகளாவிய முதல் நாள் வசூல் ரூ.78.27 கோடியாக உயர்ந்துள்ளது.

மொழிவாரியாக பார்க்கும்போது, இந்தி பதிப்பு ரூ.1.75 கோடியும், தெலுங்கு பதிப்பு ரூ.2.75 கோடியும் முதல் நாள் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால், விஜய்யின் முந்தைய படங்களான ‘பீஸ்ட்’ (ரூ.49.30 கோடி) மற்றும் ‘கோட்’ (ரூ.44 கோடி) ஆகியவற்றின் இந்திய தொடக்க வசூலை ‘ஜனநாயகன்’ முறியடிக்கவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல், முதல் நாளில் ரூ.50 கோடிக்கு மேல் இந்தியாவில் வசூலித்த தமிழ் படங்களின் பட்டியலிலும் இப்படம் இடம்பிடிக்கவில்லை என கூறப்படுகிறது.

முதல் நாள் இந்திய வசூல் பட்டியலில் ரஜினிகாந்தின் ‘கூலி’ திரைப்படம் ரூ.65 கோடியுடன் முதலிடத்திலும், விஜய்யின் ‘லியோ’ திரைப்படம் ரூ.64.80 கோடியுடன் முன்னணி இடத்திலும் இருப்பதாக வர்த்தக தகவல்கள் குறிப்பிடுகின்றன.

H VinothjananayaganJananayagan Day 1 Box Office Collection Revealedvijay