‘அன்பில் அவன்’ திரைப்படத்தின் இசை மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது. அசோக் செல்வன், ப்ரீத்தி முகுந்தன், சபுமோன் அப்துசமத், கதிர் பாலு, மஹா டெல்லி கணேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்தை ஆர். கார்த்திகேயன் இயக்கியுள்ளார். ‘போர் தொழில்’ பட இயக்குநர் விக்னேஷ் ராஜா கதையை எழுதியுள்ளார்.
கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ள இப்படத்திற்கு கௌதம் ராஜேந்திரன் ஒளிப்பதிவு செய்ய, ஆர்.கே. செல்வா படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். ஐங்கரன் இண்டர்நேஷனல் மற்றும் ஹேப்பி ஹை பிக்சர்ஸ் சார்பில் கே. கருணாமூர்த்தி, அசோக் செல்வன், அபிநயா செல்வம் இணைந்து தயாரித்துள்ளனர்.
நிகழ்ச்சியில் பேசிய தயாரிப்பாளர் அபிநயா, கதையைப் பிடித்ததாலேயே இப்படத்தைத் தயாரிக்க முடிவு செய்ததாக தெரிவித்தார். மேலும், அசோக் செல்வன் தனது சகோதரர் மட்டுமல்லாமல் சிறந்த நண்பரும் என்றும் கூறினார். காதல் மற்றும் திருமண வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்களை தம்பதிகள் எவ்வாறு எதிர்கொண்டு மீள்கிறார்கள் என்பதே ‘அன்பில் அவன்’ படத்தின் கதை என்றும் அவர் தெரிவித்தார்.
படத்தின் கதாசிரியர் விக்னேஷ் ராஜா பேசுகையில், வட இந்தியாவில் பயணித்தபோது ஏற்பட்ட ஒரு எதிர்பாராத சம்பவமே இப்படத்தின் கதைக்கான முதல் விதையாக அமைந்ததாக கூறினார். கனவு கண்ட வாழ்க்கையை வாழ நினைக்கும் ஒரு தம்பதி எதிர்கொள்ளும் சிக்கல்களை மையமாகக் கொண்ட காதல் கதையாக இப்படம் உருவாகியுள்ளதாக தெரிவித்தார்.
- Advertisement -
இயக்குநர் ஆர். கார்த்திகேயன், இப்படம் உருவாக விக்னேஷ் ராஜாவின் கதை முக்கிய காரணம் என்றும், அசோக் செல்வன் மற்றும் அபிநயா செல்வம் அளித்த ஆதரவு மிகப்பெரியது என்றும் கூறினார். குறிப்பாக, படத்தின் இறுதி 30 நிமிடங்கள் பீட்டர் ஹெய்னின் ஆக்ஷன் பங்களிப்பால் பிரம்மாண்டமாக அமைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
நடிகர் அசோக் செல்வன் பேசும்போது, நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனது படம் வெளியாகவிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார். நல்ல கதைகளையும் கதாபாத்திரங்களையும் தேர்வு செய்து நடிக்க வேண்டும் என்பதில் தான் கவனமாக இருப்பதாகவும், ‘அன்பில் அவன்’ ரசிகர்களுக்கு நல்ல திரையரங்கு அனுபவத்தை வழங்கும் என்றும் தெரிவித்தார்.
நடிகை ப்ரீத்தி முகுந்தன், அசோக் செல்வன் மற்றும் அபிநயா செல்வம் தன்னை தங்கள் குடும்பத்தில் ஒருவராக ஏற்றுக்கொண்டு வழிகாட்டியதாக நெகிழ்ச்சியுடன் கூறினார். இப்படம் தனது நடிப்பில் புதிய அனுபவத்தைத் தந்ததாகவும், பீட்டர் ஹெய்ன் இயக்கத்தில் நடித்தது பெருமையாக இருந்ததாகவும் தெரிவித்தார்.
இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு தான் மிகவும் ரசித்து பணியாற்றிய படமாக ‘அன்பில் அவன்’ அமைந்துள்ளதாக கூறினார். இப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.
நடிகர்கள் ஹரிஷ் கல்யாண், கௌதம் கார்த்திக், சபுமோன் அப்துசமத், கதிர் பாலு, மஹா டெல்லி கணேஷ் உள்ளிட்டோரும் நிகழ்ச்சியில் பங்கேற்று படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர். ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ஹெய்ன், இப்படத்தை ஒரு குடும்பம் போல் உணர்ந்து பணியாற்றியதாகவும், படத்தின் ஆக்ஷன் காட்சிகள் ரசிகர்களுக்கு எதிர்பாராத விருந்தாக இருக்கும் என்றும் கூறினார்.