செல்ல நாயை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘மைலோ’ திரைப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. SSR Entertainment சார்பில் K. I. சுரேஷ் தயாரிக்கும் இப்படத்தில், முகேன் ராவ் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தை கவின் மூர்த்தி எழுதி இயக்கியுள்ளார்.
வெளியாகியுள்ள ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில், அடர் நீல நிற லெதர் ஜாக்கெட் அணிந்தபடி முகேன் ராவ் கம்பீரமாக நிற்க, அவருக்கு அருகில் தங்க நிறத்திலான செல்ல நாய் இடம்பெற்றுள்ளது. மலைப்பகுதியையும் இயற்கைச் சூழலையும் பின்னணியாகக் கொண்ட இந்தப் போஸ்டரில், ‘MORE THAN A PET, A SILENT WITNESS’ என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. இது படத்தின் மர்மம் நிறைந்த கதைக்களம் குறித்த எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
18 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற ஒரு குற்றத்தையும், ‘மைலோ’ என்ற செல்ல நாயையும் மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த குற்றத்தின் பின்னணியில் மறைந்திருக்கும் உண்மைகளை, நாயகன் செல்ல நாயின் உதவியுடன் எவ்வாறு கண்டறிகிறார் என்பதே படத்தின் மையக்கருவாகும். மர்மம், உணர்வுகள் மற்றும் கமர்ஷியல் அம்சங்கள் கலந்த படமாக ‘மைலோ’ உருவாகியுள்ளது.
- Advertisement -
இப்படத்தில் முகேன் ராவுடன் தேஜு அஸ்வினி, இளவரசு, முனீஷ்காந்த், பிக் பாஸ் புகழ் ஜனனி, ‘எங்கள் அண்ணா’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இந்திரஜா, சுரேஷ் மேனன் மற்றும் ஆதித்யா கதிர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதில், இந்திரஜா சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் திரைப்படத்தில் மீண்டும் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை, ஊட்டி, கொல்லிமலை, மூணாறு, திருவனந்தபுரம் மற்றும் மலேசியா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது. ஜென் மார்ட்டின் இசையமைக்க, ஜிஜு சன்னி ஒளிப்பதிவு செய்துள்ளார். வெங்கட் ராஜன் படத்தொகுப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளார். உமா சங்கர் மற்றும் ஜெயமுருகன் கலை இயக்கத்தைக் கவனித்துள்ளனர். கவின் மூர்த்தி மற்றும் சந்திரன் வசனங்களை எழுதியுள்ளனர். ஏ. ராஜா இணை இயக்குநராகப் பணியாற்றியுள்ளார்.
மேலும், மணி சந்திரா மற்றும் விஜி நடன அமைப்பையும், ஃபீனிக்ஸ் பிரபு மற்றும் மிராக்கிள் மைக்கேல் சண்டைப் பயிற்சியையும் மேற்கொண்டுள்ளனர்.
18 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த குற்றத்தின் மர்மத்தை ஒரு செல்ல நாயின் துணையுடன் நாயகன் கண்டறியும் வித்தியாசமான கதைக்களத்தைக் கொண்ட ‘மைலோ’ படத்தின் இசை வெளியீடு மற்றும் திரையரங்கு வெளியீட்டுத் தேதி குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.