வித்தியாசமான உலகத்தை அறிமுகப்படுத்தும் ‘ட்ரோன்ஸ்’ – மூன்று ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியீடு!

GM Morgan Films நிறுவனம் தயாரிப்பில், இயக்குநர் R. ராகவ் மிர்தாத் இயக்கத்தில் உருவாகி வரும் சர்ரியலிஸ்ட் ஃபேண்டஸி திரைப்படம் ‘ட்ரோன்ஸ்’. இப்படத்தின் மூன்று ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் தற்போது வெளியாகி ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் கவனம் பெற்றுள்ளன.

வித்தியாசமான கற்பனை உலகம், ஹாரர், ஃபேண்டஸி மற்றும் சயின்ஸ் ஃபிக்ஷன் அம்சங்களை இணைத்து உருவாகி வரும் இப்படம், தமிழ் சினிமாவில் அரிதாக முயற்சிக்கப்படும் சர்ரியலிஸ்ட் ஃபேண்டஸி பாணியில் உருவாகியுள்ளது.

கனவுகளில் மட்டுமே நிகழக்கூடிய விசித்திரமான சம்பவங்கள் நிஜ வாழ்க்கையில் நடந்தால் எப்படி இருக்கும் என்ற சுவாரஸ்யமான கேள்வியை மையமாகக் கொண்டு இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. மேட் சயின்டிஸ்ட், டிடெக்டிவ், ஏஞ்சல், சூனியக்காரி என பல வித்தியாசமான கதாபாத்திரங்களுடன், புதிரான சம்பவங்கள் நிறைந்த கற்பனை உலகிற்குள் பார்வையாளர்களை அழைத்துச் செல்லும் வகையில் இப்படம் உருவாகியுள்ளது.

தற்போது வெளியாகியுள்ள மூன்று ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களும் படத்தின் தனித்துவமான உலகத்தை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளன. முதல் போஸ்டரில் அடர்ந்த காடு, முழுநிலவு, மர்மமான கோட்டை, வௌவால்கள் மற்றும் தேவதை போன்ற உருவங்களுக்கு மத்தியில் கதாநாயகி இடம்பெற்றுள்ளார்.

இரண்டாவது போஸ்டரில் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களுடன் ட்ரோன், மர்மமான வயதான பெண் மற்றும் வித்தியாசமான சாதனங்கள் இடம்பெற்று, சயின்ஸ் ஃபிக்ஷன் மற்றும் ஃபேண்டஸி கலந்த உலகத்தை காட்டுகிறது. மூன்றாவது போஸ்டரில் எண்ணற்ற பொம்மைகள் சூழ்ந்த இருண்ட அறையில் ஆக்ரோஷமான தோற்றத்தில் சூனியக்காரி இடம்பெற்று, படத்தின் ஹாரர் மற்றும் திகில் அம்சங்களை வெளிப்படுத்துகிறது.

- Advertisement -

மூன்று போஸ்டர்களும் வெவ்வேறு மனநிலைகளையும் கதையின் பல அடுக்குகளையும் பிரதிபலிப்பதால், ‘ட்ரோன்ஸ்’ படத்தின் மீதான ரசிகர்களின் ஆர்வம் மேலும் அதிகரித்துள்ளது.

இப்படத்தில் சித்தி இத்னானி, அஞ்சலி நாயர், தேவதர்ஷினி, ‘பரிதாபங்கள்’ புகழ் டிராவிட் செல்வம், விஜய் டிவி புகழ் குரேஷி, சினிமாவாலா சதீஷ், சசி செல்வராஜ் மற்றும் இப்படத்தின் மூலம் அறிமுகமாகும் ஆர்ஜே தீபக் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஜெயந்த் சேது மாதவன் ஒளிப்பதிவு செய்ய, ஹரி S.R. இசையமைத்துள்ளார். சதீஷ் சூர்யா படத்தொகுப்பையும், R. கிஷோர் கலை இயக்கத்தையும், ஹர்ஷிகா ரமேஷ் ஆடை வடிவமைப்பையும் கவனித்துள்ளனர்.

இதற்கிடையே, ஃபைவ் ஸ்டார் நிறுவனத்தின் தயாரிப்பாளர் செந்தில், ‘ட்ரோன்ஸ்’ திரைப்படத்தை தனது குடும்பத்துடன் பார்த்து ரசித்ததையடுத்து, இப்படத்தின் முழு உரிமையையும் வாங்கியுள்ளார். ஃபைவ் ஸ்டார் நிறுவனம் சார்பில் இப்படம் இந்தியா முழுவதும் பல மொழிகளில் வெளியாகவுள்ளது.

தற்போது படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் விரைவில் வெளியாகவுள்ளன. ஃபேண்டஸி, சயின்ஸ் ஃபிக்ஷன் மற்றும் ஹாரர் என பல்வேறு அம்சங்களை ஒன்றிணைத்து உருவாகியுள்ள ‘ட்ரோன்ஸ்’, ரசிகர்களுக்கு வித்தியாசமான திரையனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

DronesDrones Introduces a Bizarre New World