‘அமரன்’ படம் குறித்து இயக்குனர் கோபி நைனார் வெளியிட்ட வைரல் பதிவு

நயன்தாரா நடிப்பில் வெளிவந்த ‘அரண்’ திரைப்படத்தை இயக்கியவர் கோபி நைனார். இவர் அமரன் படம் குறித்து தெரிவித்துள்ள வார்த்தைகள் தற்போது வைரலாகி வருகிறது. அது குறித்த தகவல் பார்ப்போம்..

வீர மரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் தேசப்பற்று மிக்க வாழ்வியலாய் உருவாகியிருக்கும் ‘அமரன்’ திரைப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்க, கமல்ஹாசன் தயாரித்துள்ளார் என்பது தெரிந்ததே.

முகுந்த் வரதராஜனாக மாறிய சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர். திரைப்படத்தை அனைவரும் பாராட்டி வரும் நிலையில்.. நயன்தாரா நடிப்பில் ‘அரண்’ திரைப்படத்தை இயக்கிய கோபி நைனார், தன் கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

‘சமீபத்தில் நான் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடித்த ‘அமரன்’ திரைப்படத்தை பார்த்தேன். அனைவரும் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவியின் சிறப்பான நடிப்பை பாராட்டியும், அதனால் இது ஒரு சிறந்த திரைப்படம் என கருதுவதாகவும் எனக்கு புரிய வருகிறது. அதனால், இந்த படம் மிகப்பெரிய வசூலையும் ஈட்டி உள்ளது.

ஆனால், இந்த திரைப்படம் சொல்ல வரும் கருத்தைப் பற்றி யாரும் பேச மறுக்கிறார்களா? இல்லை கவனிக்க மறந்து விட்டார்களா? என்ற கேள்வி எழுகிறது.

இப்படத்தின் திரைக்கதைக்கு பின் இருக்கும் ஒரு சமூகத்தின் துயரத்தை யாரும் கவனிக்கவில்லை என்பது வேதனை அளிப்பதாக உள்ளது.

ஒருவன், ஒரு குழந்தையை தனது துப்பாக்கியால் ஒரே குண்டில் கொல்கிறான். குழந்தை துடித்து இறக்கிறது. அதனைக் கண்ட தாய் துடிதுடிக்கிறாள்.

இதனைக் கண்ட அனைவரும் அவர் எவ்வளவு அருமையாக சுடுகிறார், அது குழந்தை என்பதால் இரண்டு மூன்று குண்டுகளால் துளைக்கப்பட்டு துடித்து சாகக்கூடாது என ஒரே குண்டால் அதன் இதயத்தை நோக்கி பிரமாதமாக சுட்டு ஒரே நொடியில் அருமையாக கொல்கிறார் என சிலாகித்து பேசுகின்றனர்.

ஆனால், அங்கு கத்திக் கதறி அழும் அந்த தாயை யாரும் கவனிக்கவில்லை. எல்லோரும் அந்தக் குழந்தை எப்படி நேர்த்தியாக சுட்டுக் கொல்லப்பட்டது என்பதைப் பற்றியே பேசிக்கொண்டிருக்கின்றனர்.

இவ்வாறு அந்த குழந்தையின் மரணமும் அதன்பின் இருக்கும் வேதனையும் மறைக்கப்பட்டதே இந்த திரைப்படத்தின் கருத்தாக இருக்கிறது. நானும் சொல்கிறேன் அமரன் திரைப்படம் மிகச் சிறப்பாக இருந்தது. லட்சக்கணக்கான காஷ்மீர் மக்களின் கண்ணீரோடு’ என அவர் பதிவிட்டிருந்தார்.

இவரின் இந்த கருத்துக்கள் வலைத்தளங்களில் வைரலாகி தெறிக்கிறது. ஆம்.. உணர்வுப்பூர்வமான கருத்து தான்.!

actor sivakarthikeyanamaran movieRajkumar Periasamyசாய் பல்லவிநயன்தாரா