‘கூலி’ திரைப்படத்தின் உலகளாவிய வசூல் குறித்து சில குழுக்களும், அதிகாரப்பூர்வமற்ற பக்கங்களும் தவறான தகவல்களைப் பரப்புவதாக ஹம்சினி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்நிறுவனம் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில்,
‘உண்மையான வசூல் நிலவரத்தை தயாரிப்பாளர்களும், ஹம்சினி எண்டர்டெயின்மென்ட் (வெளிநாட்டு விநியோகஸ்தர்) நிறுவனமும் மட்டுமே வெளியிடும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இணையத்தில் பரவும் மற்ற பாக்ஸ் ஆபீஸ் நம்பர்கள் நம்பகத்தன்மையற்றவை, அவை உண்மையாக கருதப்படக்கூடாது.
மேலும், இட்டுக்கட்டப்பட்ட புள்ளிவிவரங்கள் அல்லது மிகைப்படுத்தப்பட்ட ஒப்பீடுகளைப் பரப்புவது, திரைப்படம், அதன் பங்குதாரர்கள் மற்றும் பார்வையாளர்களின் நற்பெயருக்கு தீங்கு விளைவிக்கும். இத்தகைய நடவடிக்கைகளை நிறுவனம் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது.
திரைப்படத்தின் மீதான எந்தவொரு திட்டமிட்ட திரித்தல், கையாளுதல் அல்லது அவதூறு பரப்பும் முயற்சிக்கும் எதிராக அவதூறு மற்றும் நிதி இழப்பீடுகளுக்கான கோரிக்கைகள் உட்பட கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். திரைப்பட விநியோகஸ்தர்கள், பங்குதாரர்கள் மற்றும் வர்த்தக வட்டாரங்கள் நம்பகமான அதிகாரப்பூர்வ வழிகள் மூலம் மட்டுமே தகவல்களை சரிபார்க்க வேண்டும்.
பார்வையாளர்களின் அன்பும் ஆதரவுமே உண்மையான வெற்றியாகும், தவறான தகவல் பரப்பும் எந்தவொரு பிரச்சாரமும் இதை மறைக்க முடியாது. சினிமா என்பது பார்வையாளர்களுக்கானது, குறிப்பிட்ட சிலரின் நலன்களுக்கானது அல்ல. நேர்மையுடனும் நியாயத்துடனும் திரைப்படங்களை கொண்டாடுவோம்’ என ஹம்சினி எண்டர்டெயின்மென்ட் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
‘கூலி’ படத்தின் இதுவரையிலான அதிகாரப்பூர்வ உலக வசூலை ஹம்சினி எண்டர்டெயின்மென்ட் அல்லது சன் பிக்சர்ஸ் நிறுவனம் விரைவில் அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.