தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நடிகையான சமந்தா நடிப்பில், நந்தினி ரெட்டி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மா இண்டி பங்காரம்’. இத்திரைப்படம் வரும் ஜூன் 19 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இப்படத்தை ராஜ் நிடிமோரு மற்றும் ஹிமங்க் ரெட்டி துவ்வுரு ஆகியோருடன் இணைந்து, சமந்தா தனது சொந்தத் தயாரிப்பு நிறுவனமான ‘டிராலாலா மூவிங் பிக்சர்ஸ்’ (Tralala Moving Pictures) பேனரின் கீழ் தயாரித்துள்ளார். தற்போது இப்படத்திற்கான புரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு சமந்தா அளித்த பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது.
‘அதிர்ஷ்டக் கால்’ அழுத்தமும் சினிமா போதையும்:
அவ்வியாகப்பேசுகையில், “ஒரு சாதாரண பெண்ணான எனக்கு இவ்வளவு பெரிய ஸ்டார்டம் கிடைத்ததும், ரசிகர்கள் திரையில் என் பெயரைப் பார்த்துக் கத்துவதும் பேரதிர்ச்சியாக இருந்தது. அந்த அதிர்ச்சிதான் என்னை அடுத்தடுத்து ஓட வைத்தது. ஒருகட்டத்தில் சினிமா எனக்கு ஒரு போதையாகவே மாறிப்போனது” என்றார்.
மேலும், “ஆரம்பகாலத்தில் ஒரே வருடத்தில் நான் நடித்த 5 படங்களும் ஹிட்டானதால், என்னை ‘அதிர்ஷ்டக் கால்’ (Golden leg) கொண்டவர் எனப் பாராட்டினர். ஆனால், அதனால் ஏற்பட்ட அழுத்தத்தால் என் திறமையை வளர்த்துக் கொள்வதைப் பற்றி யோசிக்காமல், வெறும் பாக்ஸ் ஆபீஸ் வெற்றிகளோடு மட்டுமே நான் திருப்தி அடைந்தேன். எனது திரை ஓட்டத்தில் நான் பெருமைப்பட முடியாத பல திரைப்படங்களிலும் நடித்திருக்கிறேன்” எனச் சுயவிமர்சனம் செய்துள்ளார்.
அகம்பாவத்தை உடைத்த நோய் பாதிப்பு:
தன் உடல்நலக் குறைவு மற்றும் இடைவெளிகள் குறித்துப் பேசிய அவர்:
“2012-ம் ஆண்டிலேயே, எனது திரைப்பயணம் தொடங்கிய 15 நாட்களிலேயே உடல்நலக் குறைவால் படுக்கையில் விழ நேரிட்டது. ஆனால், அந்த முதல் இடைவெளியில் இருந்து நான் எதையுமே கற்றுக்கொள்ளவில்லை. அதன்பிறகும் ஆண்டிற்கு 5 முதல் 6 படங்கள் எனத் தொடர்ந்து ஓடி, வசூலுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்தேன்.
நடிகர்களாக இருக்கும்போது நமக்கு ஓய்வே கிடையாது என்ற ஒரு அகம்பாவம் (Ego) வந்துவிடுகிறது. நான் மிகக் கடுமையாக உழைத்துக் கொண்டிருந்த நேரத்தில்தான் இந்த இரண்டாவது இடைவெளி (நோய் பாதிப்பு) வந்தது. ஆனால், இந்த நோய் என் எண்ண ஓட்டத்தை முழுமையாக மாற்றியது.”
புதிய பாதையில் சமந்தா:
“மீண்டும் சினிமாவுக்குத் திரும்பினால் பழைய வாழ்க்கைப் பாணியை மாற்ற வேண்டும் என முடிவெடுத்தேன். அதன்படியே பிராண்டுகள், திரைப்படத் தேர்வுகள் என எல்லாவற்றையும் மாற்றி, தற்போது எனது சொந்தத் தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கியுள்ளேன். இப்போது என் வாழ்க்கையை ஒரு தெளிவான நோக்கத்தோடு வாழ்கிறேன்” என்று சமந்தா உறுதியோடு தெரிவித்துள்ளார்.
தன் தவறுகளையும், திரைவாழ்க்கையின் இருண்ட பக்கங்களையும் நேர்மையுடன் ஒப்புக்கொண்டுள்ள சமந்தாவின் இந்த உத்வேகப் பேச்சு, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.