சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் சீயான் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்திற்கு ‘பவர்ஹவுஸ்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதுவரை ‘சீயான் 63’ என தற்காலிகமாக அழைக்கப்பட்டு வந்த இப்படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பை, அட்டகாசமான வீடியோ மூலம் படக்குழு தற்போது அறிவித்துள்ளது.
இப்படத்தை ‘இருமுகன்’ படத்தைத் தொடர்ந்து இயக்குநர் ஆனந்த் சங்கர் இயக்குகிறார். சுமார் ஒரு தசாப்தத்திற்குப் பிறகு விக்ரம் – ஆனந்த் சங்கர் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
தலைப்பு அறிவிப்பு வீடியோ, அழகான குடும்பத்தின் அன்றாட வாழ்க்கையை காட்டும் வகையில் தொடங்குகிறது. விக்ரம் வீட்டிற்குள் நுழைவது முதல் குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவராக அறிமுகமாகும் காட்சிகள் இடம்பெறுகின்றன. சம்யுக்தா ஹெக்டே, வி.டி.வி. கணேஷ், ஊர்வசி உள்ளிட்டோர் இந்தப் பகுதியில் இடம்பெறுகின்றனர்.
ஆனால், அடுத்த சில நொடிகளில் இந்த அமைதியான குடும்பச் சூழல் முற்றிலும் மாறி, அதிரடியான ஆக்ஷன் உலகமாக மாறுகிறது. பூட்டிய அறையைத் திறந்து உள்ளே செல்லும் விக்ரம், அங்கு அடிபட்டு கிடக்கும் அடியாட்களுடன் பேசும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதன் மூலம் விக்ரமின் கதாபாத்திரத்தின் மற்றொரு முகத்தை வெளிப்படுத்தும் விதத்தில் வீடியோ அமைந்துள்ளது.
- Advertisement -
குடும்ப உணர்வுகள், சென்டிமெண்ட், திரில்லர் மற்றும் கமர்ஷியல் ஆக்ஷன் என அனைத்து அம்சங்களும் கலந்த படமாக ‘பவர்ஹவுஸ்’ உருவாகி வருகிறது.
இப்படத்தில் எம்.எஸ். பாஸ்கர், ஊர்வசி, சம்யுக்தா ஹெக்டே, ரியா ஷிபு, வி.டி.வி. கணேஷ், சுபாஷ் செல்வம், விஷ்ணு ஜி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் டி.ஜி. தியாகராஜன் வழங்கும் இப்படத்தை செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் தயாரிக்கின்றனர். ஜி. சரவணன் மற்றும் சாய் சித்தார்த் இணைத் தயாரிப்பாளர்களாக உள்ளனர்.
சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, ஆர்.டி. ராஜசேகர் ISC ஒளிப்பதிவு செய்கிறார். ராஜீவன் தயாரிப்பு வடிவமைப்பையும், ஷான் கருப்புசாமி வசனத்தையும் கவனிக்கின்றனர். ஸ்டண்ட் சில்வா சண்டைக் காட்சிகளை அமைக்கிறார். பிருந்தா நடன அமைப்பையும், ரேமண்ட் டெரிக் கிராஸ்டா படத்தொகுப்பையும் மேற்கொள்கின்றனர்.
‘பவர்ஹவுஸ்’ எனும் மாஸ் தலைப்புடன், குடும்பப் பின்னணியில் தொடங்கி ஆக்ஷன் களமாக மாறும் தலைப்பு அறிவிப்பு வீடியோ ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.