பாவனா ஸ்டுடியோஸ் தயாரிப்பில், இயக்குநர் கிரீஷ் ஏ.டி. இயக்கத்தில் நிவின் பாலி, மமீதா பைஜூ உள்ளிட்டோர் நடித்துள்ள ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
மலையாளத்தில் கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதி வெளியான இப்படம், விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதையடுத்து, இப்படத்தின் தமிழ் பதிப்பு செப்டம்பர் 4ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
தமிழ் ரசிகர்களுக்கு படத்தை அறிமுகப்படுத்தும் வகையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் தயாரிப்பாளர்கள் பகத் பாசில், உன்னி மாயா பிரசாத் மற்றும் இயக்குநர் கிரீஷ் ஏ.டி. ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய தயாரிப்பாளர் உன்னி மாயா பிரசாத், “மலையாள ரசிகர்களைப் போலவே தமிழ் ரசிகர்களுக்கும் இந்த திரைப்படம் பிடிக்கும் என நம்புகிறேன். அனைவரும் திரையரங்குகளில் படத்தை பார்த்து ஆதரவு தர வேண்டும்” என்றார்.
இயக்குநர் கிரீஷ் ஏ.டி. பேசுகையில், “செப்டம்பர் 4ஆம் தேதி வெளியாகும் ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படத்தை குடும்பத்தினருடன் திரையரங்குகளில் சென்று பாருங்கள். இந்த படம் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்” என்றார்.
- Advertisement -
மேலும், “‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ என்பது கேரளாவில் தேவாலயங்களைச் சுற்றியுள்ள குடும்பங்களை குறிப்பிடும் ஒரு வகையான சொல்லாடல். இப்படத்தில் இடம்பெறும் சில கதாபாத்திரங்கள் நிஜ வாழ்க்கையில் இருந்து உருவாக்கப்பட்டவை. கதையின் நாயகனான ஜஸ்டின் கதாபாத்திரமும் எனக்கு நன்கு அறிமுகமான ஒருவரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது” எனத் தெரிவித்தார்.
தயாரிப்பாளர் பகத் பாசில் பேசுகையில், நிவின் பாலி மற்றும் மமீதா பைஜூ தவிர்க்க முடியாத காரணங்களால் நிகழ்ச்சியில் பங்கேற்க முடியவில்லை எனக் குறிப்பிட்டார்.
மேலும், “‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ எனக்கு மிகவும் ஸ்பெஷலான திரைப்படம். நான், தினேஷ் மற்றும் ஷியாம் ஆகிய மூவரும் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளோம். 2018ஆம் ஆண்டு தொடங்கிய எங்களது நட்பு தொடர்ந்து சிறப்பாக பயணித்து வருகிறது. எங்களது மனதிற்கு நெருக்கமான கதைகளை தேர்வு செய்து தொடர்ந்து திரைப்படங்களை தயாரிக்க உள்ளோம்” என்றார்.
தமிழ் சினிமா ரசிகர்கள் எப்போதும் தரமான படங்களை வரவேற்று கொண்டாடுவார்கள் என்றும், அந்த வகையில் ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படத்தையும் அவர்கள் கொண்டாடுவார்கள் என நம்புவதாகவும் பகத் பாசில் தெரிவித்தார்.
இப்படத்தில் நிவின் பாலி, மமீதா பைஜூ, சங்கீத் பிரதாப், ரோஷன் ஷா நவாஸ், ஷியாம் மோகன், சுரேஷ் கிருஷ்ணா, வினய் ஃபோர்ட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அஜ்மல் ஷபு ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு விஷ்ணு விஜய் இசையமைத்துள்ளார்.
ரொமான்டிக் காமெடி என்டர்டெய்னராக உருவாகியுள்ள இப்படத்தை பாவனா ஸ்டுடியோஸ் மற்றும் பகத் பாசில் & பிரண்ட்ஸ் இணைந்து தயாரித்துள்ளன. தமிழில் ப்ரீமார்க் புரொடக்ஷன் மற்றும் ஃபியூச்சர் ரன்னர் அப் பிலிம்ஸ் இணைந்து வழங்குகின்றன.