ஸ்வஸ்திக் விஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘அங்கீகாரம்’ திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான “சட்ட சட்ட சட்ட சான்றோரே” தற்போது வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ‘Contempt of Time’ என்ற தலைப்பில் வெளியான இந்தப் பாடல், சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வரவேற்பைப் பெற்று வருகிறது.
இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையில், கார்த்திக் நேத்தா எழுதியுள்ள இந்தப் பாடலை புகழ்பெற்ற பாடகி வைக்கம் விஜயலட்சுமி தனது உணர்வுபூர்வமான குரலில் பாடியுள்ளார். சட்டம், நீதி, அங்கீகாரம் மற்றும் சமூகத்தின் முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்கும் வலுவான வரிகளால் பாடல் ரசிகர்களை சிந்திக்க வைக்கிறது.
பல உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, தடகள விளையாட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள ‘அங்கீகாரம்’, விளையாட்டு வீரர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் அவர்களுக்கான அங்கீகாரப் போராட்டத்தை மையமாகக் கொண்ட திரைப்படமாக உருவாகியுள்ளது. ஏற்கனவே வெளியான டிரெய்லர், நீதிக்காக போராடும் ஒரு தடகள வீரனின் உணர்ச்சிகரமான பயணத்தை வெளிப்படுத்தி பார்வையாளர்களின் எதிர்பார்ப்பை உயர்த்தியுள்ளது.
திரைப்படத்தின் முக்கிய அம்சமாக, சுமார் 75 லட்சம் ரூபாய் செலவில் நீதிமன்ற வளாக செட் அமைக்கப்பட்டு முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. இது படத்தின் தயாரிப்பு தரத்தையும் பிரம்மாண்டத்தையும் எடுத்துக்காட்டுகிறது.
இந்தப் படத்தின் மூலம் கே.ஜெ.ஆர் கதாநாயகனாக அறிமுகமாகிறார். அவருடன் விஜி வெங்கடேஷ், அஜித் கோஷி, சிந்தூரி விஸ்வநாத், ஆண்டனி, ரங்கராஜ் பாண்டே, மன்சூர் அலிகான், மோகன்ராம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
பா.ரஞ்சித் அவர்களிடம் துணை இயக்குநராக பணியாற்றிய தென்பாதியான் இப்படத்தை இயக்கியுள்ளார். ஏ. விஸ்வநாத் ஒளிப்பதிவு செய்துள்ள நிலையில், பீட்டர் ஹெயின் சண்டைக் காட்சிகளை வடிவமைத்துள்ளார். தினேஷ்குமார் படத்தொகுப்பு, ராமு தங்கராஜ் கலை இயக்கம், சம்பத் ஆழ்வார் ஒலி வடிவமைப்பு மற்றும் ஷெரீப் நடன அமைப்பு ஆகியவை படத்தின் தொழில்நுட்ப பலத்தை உயர்த்துகின்றன.
பிரசாந்த், அஜித்பாஸ்கர் மற்றும் அருண்முருகன் இணைந்து தயாரித்துள்ள ‘அங்கீகாரம்’ திரைப்படத்தின் முதல் பாடல் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், படத்தின் வெளியீட்டு அறிவிப்புக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.