சாதனை வீரருக்கு வாழ்த்து தெரிவித்த நடிகை சிம்ரன்

காமன்வெல்த் போட்டியில் ஆண்களுக்கான 65 கிலோ எடைப்பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவுக்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்த்த பளுதூக்கும் வீரர் ராஜா முத்துப்பாண்டியை நடிகை சிம்ரன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்தச் சந்திப்பின்போது, ராஜா முத்துப்பாண்டி தனது காமன்வெல்த் வெள்ளிப் பதக்கத்தை சிம்ரனிடம் காண்பித்தார். அவரது கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் விடாமுயற்சியைப் பாராட்டிய சிம்ரன், இந்தச் சாதனை அவரது வெற்றிப் பயணத்தின் தொடக்கம் மட்டுமே என்றும், எதிர்காலத்தில் மேலும் பல உயரங்களை அவர் எட்ட வேண்டும் என்றும் வாழ்த்தினார்.

“இந்த வெற்றியின் மூலம் ஏற்கனவே இந்தியாவுக்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளீர்கள். குறிப்பாக தமிழகத்தைச் சேர்ந்த நீங்கள் சர்வதேச அரங்கில் இப்படியொரு சாதனையை படைத்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியையும் பெருமையையும் அளிக்கிறது. இதே உறுதியுடனும் விடாமுயற்சியுடனும் தொடர்ந்து தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்று மேலும் பல வெற்றிகளையும் பதக்கங்களையும் வெல்ல வேண்டும்” என சிம்ரன் அவரை ஊக்கப்படுத்தினார்.

- Advertisement -

தொடர்ந்து, ராஜா முத்துப்பாண்டியுடன் அன்பாக உரையாடிய சிம்ரன், அவரது சொந்த ஊரான கோவில்பட்டி மற்றும் குடும்பத்தினர் குறித்தும் கேட்டறிந்தார். தனது சொந்த ஊர் கோவில்பட்டி என்பதை ராஜா முத்துப்பாண்டி தெரிவித்தபோது, அந்த ஊருடன் தனக்குள்ள திரைப்படத் தொடர்பான நினைவுகளையும் சிம்ரன் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார்.

சந்திப்பின் நிறைவில், ராஜா முத்துப்பாண்டி தனது வெள்ளிப் பதக்கத்துடன் சிம்ரனுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். சர்வதேச அளவில் சாதனை படைத்த தமிழக வீரரைப் பாராட்டி, அவரது எதிர்கால வெற்றிப் பயணத்திற்கு சிம்ரன் வாழ்த்து தெரிவித்த இந்தச் சந்திப்பு, இருவருக்கும் மகிழ்ச்சியான தருணமாக அமைந்தது.

actress simranActress Simran Congratulates Accomplished AthleteRaja Muthupandi