கமல்ஹாசன் கூட்டணியில் உருவான ‘தக் லைஃப்’ படத்துக்குப் பிறகு, மணிரத்னம் காதல் கதை ஒன்றை இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
‘தக் லைஃப்’ படம் தோல்வியை தழுவியதால், தனது அடுத்த படத்தின் கதையை மெருக்கேற்றி வந்தார் மணிரத்னம். தற்போது நவம்பர் மாதம் முதல் படப்பிடிப்பு தொடங்க முடிவு செய்திருக்கிறார்.
காதல் கலந்த ஆக்ஷன் கதையாக இதனை உருவாக்கவுள்ளார் மணிரத்னம். இதில், துருவ் விக்ரம் நாயகனாக நடிக்கவுள்ளார். நாயகியாக ருக்மணி வசந்த் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரகுமான் பணிபுரியவுள்ளார். இதன் முதற்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் இதனை தயாரிக்கவுள்ளது.
முதலில் இக்கதையை புதுமுகங்களை வைத்து இயக்க திட்டமிட்டு இருந்தார். பின்பு சிம்புவை வைத்து திட்டமிட்டார். ஆனால், ‘தக் லைஃப்’ தோல்வியினால் இப்போது துருவ் விக்ரமை வைத்து இயக்கவுள்ளார். விக்ரமை வைத்து ‘ராவணன்’ மற்றும் ‘பொன்னியின் செல்வன்’ படங்களை இயக்கியுள்ளார் மணிரத்னம். தற்போது அவரது மகனை வைத்து படம் இயக்க முடிவு செய்திருக்கிறார்.