புஷ்பா-2 மூன்றரை மணிநேர படத்தை இப்போதே குறைத்து வெளியிடுவது நல்லது: நெட்டிசன்ஸ் கருத்து

‘அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சாகும்’ என்பது மூத்தோர் சொன்ன அனுபவ மொழி. இது தற்போது புஷ்பா-2 படத்திற்கும் பொருந்துமோ என எண்ணத் தோன்றுகிறது. அதாவது விஷயம் என்னன்னா..
புஷ்பா பட ஹிட்டை தொடர்ந்து இரண்டாம் பாகம் சுமார் 350 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகி, வருகிற டிசம்பர் 4-ந் தேதி பான் இந்தியா அளவில் ரிலீஸ் ஆக உள்ளது. படத்தின் புரமோஷன் பணிகளும் புயலாய் விரைகின்றன.
புஷ்பா முதல் பாகத்தில் ஆடிய சமந்தாவின் ஆட்டத்தை விடவும், இரண்டாம் பாகத்தில் ஸ்ரீ லீலா ஆடியிருக்கும் ஆட்டம் தற்போது செம டிரெண்டிங்.
அல்லு அர்ஜூனுடன் அவர், ஆடியுள்ள ‘கிஸ்ஸிக்’ என்கிற பாடல் அண்மையில் ரிலீஸ் ஆகி யூடியூப்பில் தீயாய் வைரலாகி வருகிறது. கடந்த 24-ந் தேதி வெளியான கிஸ்ஸிக் பாடல், 24 மணி நேரத்திற்குள் 4.2 கோடி பார்வைகளை கடந்து, இதுவரை எந்த லிரிக் பாடலும் பெறாத அளவிற்கு பார்வைகளை பெற்று, புதிய சாதனை படைத்துள்ளது.
இப்பாடலின் வரிகளை விவேகா எழுதியுள்ளார். பாடலை சுப்லாஷினி பாடியுள்ளார். பாடலின் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும், இது வரை 5 கோடிக்கும் அதிகமாக பார்வைகளை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இத்தகைய பெரிய வரவேற்பில், புஷ்பா 2 படத்திற்கான முன்பதிவும் தொடங்கப்பட்டு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், புஷ்பா 2 படத்தின் ரன்னிங் டைம் விவரம் தற்போது வெளியாகியுள்ளது.
அதன்படி, இப்படம் 3 மணிநேரம் 21 நிமிடம் ஓடக்கூடிய அளவு மிகப்பெரிய ரன்னிங் டைம் கொண்டுள்ளது. அதில், முதல் பாதி 1 மணிநேரம் 40 நிமிடமும், இரண்டாம் பாதி 1 மணிநேரம் 41 நிமிடமும் ஓடும் என கூறப்படுகிறது.
படம் 3 மணிநேரம் ஓடினாலே ரசிகர்கள் பொறுமை இழந்துவிடுவார்கள். அதில், புஷ்பா 2 படம் அதற்கு மேல் ஓடுவதால், திரைக்கதை சற்று டல் அடித்தாலும், படம் சொதப்புவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக நெட்டிசன்கள் ஆதங்கத்துடன் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
‘வருமுன் காப்போம்’ என படக்குழு இதனைக் கவனத்தில் எடுத்துக் கொள்ளுமா என்பது கேள்விக்குறியே. பொறுத்திருந்து பார்ப்போம்.!!
