அஜித் சாரின் லெ மான்ஸ் பயணம் இந்திய மோட்டார் விளையாட்டின் வரலாற்றுச் சாதனை – இயக்குநர் விஜய் நெகிழ்ச்சி பதிவு

உலகின் மிகவும் புகழ்பெற்ற மற்றும் சவாலான மோட்டார் விளையாட்டு போட்டிகளில் ஒன்றான 24 மணி நேர லெ மான்ஸ் (24 Hours of Le Mans) போட்டியை நேரில் கண்டு ரசித்த அனுபவம் குறித்து இயக்குநர் விஜய் தனது சமூக வலைதளப் பக்கத்தில் உணர்வுபூர்வமான பதிவை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், “வரலாற்றுச் சிறப்புமிக்க 24 மணி நேர லெ மான்ஸ் போட்டியை நேரில் கண்டு, அதை பதிவு செய்ய அழைத்ததற்காக அஜித் சாருக்கு எனது மனமார்ந்த நன்றி. 1923 ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வரும் இந்த போட்டி வெறும் கார் பந்தயம் மட்டுமல்ல. உலகின் மிகவும் பெருமைமிக்க, கடினமான மற்றும் புகழ்பெற்ற விளையாட்டு நிகழ்வுகளில் ஒன்றாகும். மோட்டார் விளையாட்டின் புகழ்பெற்ற டிரிபிள் கிரவுன் போட்டிகளான இண்டியானாபோலிஸ் 500 மற்றும் மொனாக்கோ கிராண்ட் பிரிக்ஸ் ஆகியவற்றுடன் இணைந்து, லெ மான்ஸ் தனக்கென ஒரு தனித்துவமான வரலாற்று இடத்தைப் பெற்றுள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “மோட்டார் விளையாட்டை நேசிக்கும் ஒவ்வொருவருக்கும் லெ மான்ஸில் போட்டியிடுவது என்பது திறமையும் துணிச்சலும் சோதிக்கப்படும் மிகப்பெரிய சவாலாகும். அத்தகைய உலகத் தரம் வாய்ந்த மேடையில் அஜித் சார் போட்டியிடுவதை நேரில் காணும் வாய்ப்பு கிடைத்தது எனக்கு பெருமையான தருணமாக அமைந்தது” என்று தெரிவித்துள்ளார்.
அஜித் குமாரின் சாதனையைப் பாராட்டிய அவர், “உலகப் புகழ்பெற்ற 24 மணி நேர லெ மான்ஸ் போட்டிக்கான அதிகாரப்பூர்வ ஆதரவு தொடராக விளங்கும் மிச்செலின் லெ மான்ஸ் கப் சாம்பியன்ஷிப்பில் அஜித் சார் பங்கேற்றது இந்திய மோட்டார் விளையாட்டிற்கு மிக முக்கியமான மைல்கல்லாகும். லெ மான்ஸ் போட்டி வாரத்தின் ஒரு பகுதியாக நடைபெற்ற 3 மணி நேர கடினமான எண்டூரன்ஸ் பந்தயத்தில் அஜித் ரேசிங் அணி பங்கேற்றது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மேடையில் போட்டியிடும் முதல் இந்திய அணியாக அஜித் சார், கார்த்திக் நரேன், ஆதித்யா பட்டேல் மற்றும் ரோமேன் வோஸ்னியாக் ஆகியோர் இந்தியாவின் கனவுகளையும் பெருமையையும் உலக அரங்கில் எடுத்துச் சென்றுள்ளனர்” என கூறியுள்ளார்.
அத்துடன், “இது அஜித் சாரின் தனிப்பட்ட சாதனை மட்டுமல்ல. இந்தியாவுக்கே பெருமை சேர்த்திருக்கும் வரலாற்றுத் தருணம். எதிர்காலத்தில் இந்தியாவின் சர்வதேச மோட்டார் விளையாட்டு பயணம் குறித்து பேசப்படும் போது, லெ மான்ஸில் அஜித் சார் பங்கேற்றது ஒரு முக்கிய திருப்புமுனையாக நினைவுகூரப்படும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை” என்று புகழாரம் சூட்டியுள்ளார்.
மேலும், லெ மான்ஸ் மிச்செலின் கப் போட்டியின் LMP3 பிரிவில், கார் எண் 36-ஐ ஓட்டிய கார்த்திக் நரேன் மற்றும் ஆதித்யா பட்டேல் Pro பிரிவில் 13-வது இடத்தையும், கார் எண் 16-ஐ ஓட்டிய அஜித் குமார் மற்றும் ரோமேன் வோஸ்னியாக் Pro-Am பிரிவில் 9-வது இடத்தையும் பெற்றதாக விஜய் குறிப்பிட்டுள்ளார்.
இறுதியாக, “உலகின் மிகச்சிறந்த விளையாட்டு மேடையில் இந்திய அணி வரலாற்று சிறப்புமிக்க தருணத்தை உருவாக்கியதை நேரில் பார்ப்பதற்கான வாய்ப்பை வழங்கிய அஜித் சாருக்கு மீண்டும் ஒருமுறை நன்றி. அவருக்கும் அவரது அணியினருக்கும் மேலும் பல வெற்றிகள், மறக்க முடியாத பந்தய அனுபவங்கள் மற்றும் தொடர் சாதனைகள் கிடைக்க மனமார்ந்த வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார்.
