பெற்றோரிடம் போராடி கெஞ்சினேன், அழுதேன்: திவ்யா சத்யராஜ் ‘வைரல்’ பதிவு..
தனது அரசியல் பயண தொடக்கம் பற்றி, திவ்யா கூறியுள்ள தகவல்கள் காண்போம்..
சத்யராஜின் மகள் திவ்யா தன்னை திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். இவருக்கு திமுக தலைமை, தகவல் தொழில்நுட்ப அணி துணைச் செயலாளர் பொறுப்பு வழங்கியது. இவரும் கட்சியில் பணியாற்றி வருகிறார் என்பது தெரிந்ததே. இந்நிலையில், தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது அரசியல் பயணத்தை தொடங்குவதற்கு முன்னர், பெற்றோர்களிடத்தில் போராடி அனுமதி வாங்கியது குறித்து தெரிவித்துள்ளார். பதிவில்,
‘நான் ஒரு அரசியல்வாதியாக விரும்புகிறேன் என்று என் பெற்றோரிடம் சொன்னபோது, அவர்கள் மிகவும் கவலைப்பட்டனர், ஆரம்பத்தில் எனது பெற்றோர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. ஆனால், நான் கெஞ்சினேன், அதுவும் யாசகம் பெறுவது போல கெஞ்சினேன், அழுதேன். அதன் பின்னர்தான் அவர்கள் சமாதானம் அடைந்தார்கள். ஒப்புக் கொள்ளவும் செய்தார்கள்.
குடும்பத்தினர் மற்றும் உறவினர்களின் அழுத்தம் காரணமாக, தங்கள் காதலர்களை பிரிந்து செல்லும் பல ஆண்களையும் பெண்களையும் நான் பார்க்கிறேன். அவர்களுக்கு நான் சொல்வது ஒன்றுதான், தயவுசெய்து உங்கள் காதலுக்காக போராடுங்கள்.
உங்கள் காதலானது ஒரு நபர் அல்லது ஒரு தொழில் மீதான காதலாக இருக்கலாம். அதை ஒருபோதும் விட்டுக் கொடுக்காதீர்கள். நாம் மகிழ்ச்சியாக இருக்க தகுதியானவர்கள் என்பதால் நாம் விரும்புவதை பெற வேண்டும்.
நான் அரசியல்வாதியாக இருப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். திமுக பெண்களை மதிக்கும் கட்சி. நான் அடுத்த சென்னை மேயராகப் போகிறேனா என்று நிறைய பேர் என்னிடம் கேட்கிறார்கள். நான் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், என் மக்களுக்காக தன்னலமின்றி உழைப்பேன். ஒரு மக்களுக்காக பணியாற்றுபவளாக இருப்பதற்கு உண்மையிலேயே நன்றியுள்ளவளாக இருக்கிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்.
திவ்யா சத்யராஜின் பதிவு வைரலாகி வருகிறது. சத்யராஜின் மகன் சிபி சத்யராஜ், விஜய்யின் தவெக ஆதரவாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
