தனுஷ் நடிக்கும் ‘கலாம்’ பயோபிக் குறித்து, இயக்குனர் ஓம் ராவத் அப்டேட்ஸ்..
‘தென்னகத்து இளைஞர்களுக்கு உத்வேகம் அளிக்கும் கதை’ என்றார் ஓம் ராவத். இது பற்றிய தகவல்கள் காண்போம்..
பன்முகத் திறமையாளர் தனுஷ், தற்போது ‘இட்லி கடை’ படத்தை இயக்கி முடித்துள்ளார். அடுத்து, ‘தேரே இஷ்க் மே’ என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார்.
மேலும், இளையராஜாவின் பயோபிக்கில அவர் நடிக்கப் போவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவரும், விஞ்ஞானியுமான அப்துல் கலாமின் வாழ்க்கை கதையிலும் தனுஷ் நடிக்கிறார். இதை அபிஷேக் அகர்வால், பூஷன்குமார், கிருஷ்ணன் குமார், அனில் சுங்கரா ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.
‘கேன்ஸ்’ பட விழாவில் இந்தப் படம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டனர். இதைத் தனது வலைதளப் பக்கத்தில் தனுஷ் பகிர்ந்துள்ளார்.
‘கலாம்: த மிஷல் மேன் ஆஃப் இந்தியா’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தை, ‘லோக்மான்யா: ஏக் யுக்புருஷ்’, ‘தன்ஹாஜி: தி அன்சங் வாரியர்’, ‘ஆதிபுருஷ்’ ஆகிய படங்களை இயக்கிய ஓம் ராவத் இயக்குகிறார்.
‘கலாமின் கதையை திரைக்குக் கொண்டு வருவது கலைச்சவால் மற்றும் தார்மீக, கலாச்சாரப் பொறுப்பு. இது உலகளாவிய இளைஞர்களுக்கும், குறிப்பாக தென்னகத்து இளைஞர்களுக்கும் உத்வேகம் அளிக்கும் கதை. யாராக இருந்தாலும் அவர்களுக்கான அற்புதமான பாடம், கலாமின் வாழ்க்கை’ என்றார் ராவத்.
