மாதவன்-நயன்தாரா நடித்த ‘டெஸ்ட்’ படம் ஓடாது: எஸ்.வி.சேகர் அதிரடி பதிவு

ஓடிடி.யில் வெளியான ‘டெஸ்ட்’ திரைப்படம் ஓடாது என கூறியுள்ளார் எஸ்.வி.சேகர். இது பற்றிய தகவல் காண்போம்..

சினிமாவை கடந்து, நாடகங்களில் வாயிலாக நகைச்சுவையில் புகழ் பெற்றவர் எஸ்.வி.சேகர். அரசியலிலும் பாஜகவில் இருந்து விலகி, தற்போது திமுக பக்கம் நிற்பவர். இந்நிலையில் இவர், தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவு சினிமா வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது, தயாரிப்பாளர் சசிகாந்த் இயக்கத்தில் மாதவன், நயன்தாரா, சித்தார்த், மீரா ஜாஸ்மின் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான ‘டெஸ்ட்’ படம் தியேட்டரில் வெளியே வராமல் நேரடியாக, நெட் ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது.

படத்தின் மையக் கதை கிரிக்கெட். ஆனால் படத்திற்கு கிரிக்கெட் காட்சிகள் எந்த அளவிலும் உதவவில்லை எனவும் படம் பார்த்த ரசிகர்கள் விமர்சித்தனர்.


மேலும், மாதவன் நெஞ்சு மீது நயன்தாரா படுத்துக்கொண்டு பேசும் காட்சி ரசனைதான் எனவும், படத்தை நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிட காரணம் என்ன என்ற கேள்வியும் பலர் கேட்டு வருகிறார்கள்.

இச்சூழலில், கடந்த 5-ம் தேதி ‘டெஸ்ட்’ படத்திற்கு செய்தித்தாள்களில் விளம்பரம் செய்யப்பட்டது. முன்னதாக, இப்படத்தில் எஸ்.வி.சேகர் நடிக்க கமிட் ஆகி விலகினார். இந்நிலையில் விளம்பரத்தை புகைப்படம் எடுத்த எஸ்.வி. சேகர், அதை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து..

‘என்னை ஒரு படத்தில் புக் செய்த பிறகு, நானாக விலகினாலோ, விலக்கப்பட்டாலோ அந்த படம் ரிலீசாகி தியேட்டருக்கு வராது. வந்தாலும் ஓடாது. இது வரலாறு. வரலாறு தொடர்கிறது’ என பதிவிட்டுள்ளார்.

இவரது இந்த பதிவைப் பார்த்த பலரும் எஸ்.வி. சேகர் ஏன் இப்படி இந்த படத்தை சபிக்கிறார்? பின்னணி என்னவாக இருக்கும்? என கேட்டு வருகின்றனர்.

actor s ve shekher slams test movie on twitter