ரோபோ சங்கர் நடித்த ‘அம்பி’ பட சிறப்பம்சம் என்ன?: இயக்குனர் பாஸர் ஜே எல்வின் வாய்ஸ்
தமிழ் சினிமாவில், இயக்குனர் பி.வாசுவின் மகன் நடிப்பில் ‘ஏதோ செய்தாய் என்னை’ மலையாளத்தில் பிரதீஷ் நடிப்பில் ‘ரூல் நம்பர்-4’ ஆகிய படங்களை இயக்கியவர் எல்வின். இவர் தற்போது ‘ரோபோ’ சங்கர் நடிப்பில் 3-வதாக தயாரித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘அம்பி’. இவர், இப்படத்திற்கான புரொமோஷன் பணியில் இருந்த நிலையில் கூறியதாவது:
தாணு அவர்கள் தயாரிப்பில், சிலம்பரசனின் நடிப்பில், வி.இசட். துரை இயக்கிய ‘தொட்டி ஜெயா’ படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்தபோது, தயாரிப்புத் துறையின் மீதும் எனக்கு ஈடுபாடு இருந்தது. அதனால், தயாரிப்பு பணிகளிலும் வேலை செய்திருக்கிறேன். அவ்வகையில், ஒரு படத்தை தயாரித்து இயக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவு. அது தற்போது ‘அம்பி’ படத்தின் மூலமாக நிறைவேறி இருக்கிறது.
இந்த படம், முழுக்க முழுக்க குடும்பத்துடன் பார்த்து சிரித்து மகிழும் காமெடி மூவி . இதில் கதையின் நாயகனாக ‘சின்னத்திரை புகழ்’ ‘ரோபோ’ சங்கர் அறிமுகமாகி இருக்கிறார். மேலும் ரமேஷ் கண்ணா, இமான் அண்ணாச்சி, நமோ நாராயணா, கஞ்சா கருப்பு, மோகன் வைத்யா உள்ளிட்ட காமெடி பட்டாளங்களும் கலக்கி இருக்கிறார்கள்.
ஜிவி, மரகதக்காடு போன்ற படங்களில் நடித்த அஸ்வினி கதாநாயகியாக இணைந்துள்ளார். படத்தின் சூட்டிங் சென்னை மற்றும் கள்ளக்குறிச்சியில் நடைபெற்று முடிந்துள்ளது. படத்திற்கு, வெற்றிவேல் முருகன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஏ.வி. முரளிதரன் இசையில் நான்கு பாடல்கள் இடம் பெற்றுள்ளன.
‘பாகுபலி’ பட இசையமைப்பாளர் ‘ஆஸ்கர் புகழ்’ எம்.எம். கீரவானி ஒரு பாடலும், ‘டிரம்ஸ்’ சிவமணி ஒரு பாடலும், ‘நாட்டுப்புற பாடல் புகழ்’ தேவகோட்டை அபிராமி ஒரு பாடலும் பாடியுள்ளனர். கமல்ஹாசன் சார் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் ஜி.வி.பிரகாஷ் குமார் ஒரு பாடலையும் வெளியிட்டுள்ளனர்.
‘அம்பி’ படத்தின் கதைச்சுருக்கம் என்னவென்றால், மூன்று அக்கா தங்கைகளோடு பிறந்த ஒரு அப்பாவி பையன். அதாவது, நண்பர்கள் ‘அம்பி’ என்ற பட்டப்பெயரோடு கூப்பிடும் அளவிற்கு வெகுளி.
இவனது குடும்பத்தில் கஷ்டம்; அப்பாவும் இல்லை. இதனால், வெளிநாடு போய் சகோதரிகளுக்கு திருமணம் செய்து வைத்து செட்டில் ஆகும்போது, இவனுக்கு வயது நாற்பதை தாண்டி விடுகிறது. யாரும் இவனுக்கு பெண் தர முன்வரவில்லை. இந்த சூழ்நிலையில், சகோதரிகள் மூவரும் இவனுக்கு திருமணம் செய்து வைத்தார்களா? என்கிற சுவாரஸ்ய சம்பவங்களாக விவரிக்கின்றது இப்படம். ஆனால், இதனை புதிய பரிமாணத்தில் திரைக்கதையாக வடிவமைத்து இருக்கிறேன்.
படத்தில் கிளாமர், டபுள் மீனிங் இல்லாமல் அனைவரும் ரசிக்கிற பேமிலி என்டர்டெய்னர் மூவியாக உருவாக்கப்பட்டு உள்ளது. இது அனைவரது வீட்டிலும் நிகழும் கதை. ஆதலால், அம்பியை அனைவரும் ரசிப்பீர்கள். இப்படம், கோடை விடுமுறையை முன்னிட்டு வரும் மே மாதம் ரிலீஸாகிறது’ என்றார் நம்பிக்கையுடன் இயக்குனர் பாஸர் ஜே எல்வின்.