நடிகர் ரவிமோகனின் புதிய தொடக்கம்

ரவி மோகன் தற்போது ‘கராத்தே பாபு’ மற்றும் ‘பராசக்தி’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கும் ‘பராசக்தி’ படத்தில் ரவி மோகன் வில்லனாக நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவர் நடித்துள்ள ‘ஜீனி’ திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இதனைத் தொடர்ந்து ‘தனி ஒருவன்-2′ படமும் நடிக்கவுள்ளார்.

தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக அறிவித்திருக்கும் ரவி மோகன் விவாகரத்து கோரியுள்ளார். தனிப்பட்ட வாழ்க்கையில் பிரச்சினைகளை சந்தித்து வரும் போதிலும், புதிய தொடக்கங்களை மேற்கொண்டு வருகிறார்.

அவ்வகையில், அவர் இயக்குனராக களமிறங்க இருக்கிறார். தனது முதல் படத்தை யோகிபாபுவை வைத்து இயக்க உள்ளதாக அறிவித்திருந்தார். அதன்படி, தயாரிப்பாளராகவும் ரவி மோகன் அவதாரம் எடுத்துள்ளார்.

தனது வலைதளப் பக்கத்தில், தான் தொடங்கியுள்ள தயாரிப்பு நிறுவனத்தின் லோகோ மற்றும் பெயரை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். ‘ரவி மோகன் ஸ்டுடியோஸ்’ என்கிற தனது பெயரிலேயே தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.

இந்த நிறுவனத்தின் மூலம் அடுத்தடுத்து படங்கள் தயாரிக்க உள்ளதாகவும், இதற்கான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் எனவும் கூறியுள்ளார். நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என அடுத்த கட்டத்தை நோக்கிச் செல்லும் ரவி மோகனின் புதிய பயணத்திற்கு ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.