ஜி.வி. பிரகாஷ் குமார் – மாளவிகா மனோஜ் நடிக்கும் அன்புடன் மகி முதல் பார்வை போஸ்டர்கள் வெளியீடு!

Web Ads

லார்க் ஸ்டுடியோஸ் (Lark Studios) மற்றும் பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் (Parallel Universe Pictures) நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘அன்புடன் மகி’. ஜி.வி. பிரகாஷ் குமார் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இப்படம் 2027-ம் ஆண்டின் தொடக்கத்தில் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது.

லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் ஆறாவது தயாரிப்பாக உருவாகும் இப்படம், ஏற்கனவே அந்நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியான ‘கருடன்’, ‘மாமன்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து உருவாகிறது. ‘ஜோ’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களின் கவனத்தை ஈர்த்த இயக்குநர் ஹரிஹரன் ராம் இப்படத்தை இயக்குகிறார்.

இப்படத்தில் கதாநாயகனாக நடிப்பதுடன், ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைப்பாளராகவும் பணியாற்றுகிறார். இதில் அவர் கிரிக்கெட் வீரராக முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதற்காகத் தீவிரப் பயிற்சிகளையும் மேற்கொண்டுள்ளார்.

‘ஜோ’ படத்தின் மூலம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்ற மாளவிகா மனோஜ் இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் பிரேம்குமார், சபரீஷ், நமீதா கிருஷ்ணமூர்த்தி, ஹரி முனியப்பன், யூடியூப் பிரபலங்களான கார்த்திக் ராமதுரை, தனுஷ், சன் டிவி தொகுப்பாளர் ராகேஷ் மற்றும் காவ்யா அறிவுமணி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Web Ad 2

‘கர்ணன்’, ‘வாழை’ உள்ளிட்ட படங்களில் ஒளிப்பதிவின் மூலம் கவனம் ஈர்த்த தேனி ஈஸ்வர் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். சக்தி பிரணேஷ் படத்தொகுப்பையும், மீவின் வினோத் கலை இயக்கத்தையும் கவனிக்கின்றனர்.

இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருடன், படத்தின் காட்சியமைப்பு, கதையின் தன்மை மற்றும் ஒட்டுமொத்த திரை அனுபவத்தை எடுத்துரைக்கும் வகையில் விரிவான லுக் புக் ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளது.

தற்போது இறுதிக்கட்டப் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ‘அன்புடன் மகி’ திரைப்படம் 2027-ம் ஆண்டின் தொடக்கத்தில் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.