இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடத் தேர்வான தமிழ்ப் படம் ‘அறிவு’!

Movietron Production தயாரிப்பில் உருவாகியுள்ள ‘அறிவு’ திரைப்படம், கோவாவில் நடைபெறவுள்ள 57-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (57th International Film Festival of India – IFFI 2026), இந்தியன் பனோரமா ‘New Horizons’ பிரிவில் திரையிடத் தேர்வாகியுள்ளது. இதன் மூலம், சர்வதேசத் திரைப்பட அரங்கில் தமிழ் சினிமாவுக்குப் பெருமை சேர்க்கும் படைப்பாக ‘அறிவு’ கவனம் பெற்றுள்ளது.
சாய்வினோத் ஜெயக்குமார் தயாரிப்பில், ‘கழுகு’ திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் சத்யசிவா இப்படத்தை இயக்கியுள்ளார். இதில் ‘உறியடி’ விஜய்குமார் மற்றும் கயல் ஆனந்தி முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பெண்களின் உரிமைகள் மற்றும் சமூகத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை மையமாகக் கொண்டு, வலுவான சமூகச் சிந்தனையுடன் இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் இணைத் தயாரிப்பாளராக சாய்பிரபு ஜெயக்குமார் பணியாற்றியுள்ளார்.
மேலும், இப்படத்தில் I. M. விஜயன், சிங்கம்புலி, தீபா சங்கர் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். D. இமான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு தில் ராஜு ஒளிப்பதிவு செய்துள்ளார். வெற்றி கிருஷ்ணன் படத்தொகுப்புப் பணிகளையும், S.K. கலை இயக்கத்தையும் கவனித்துள்ளனர். ராமு M. தயாரிப்பு மேற்பார்வையாளராகவும், அரவிந்த் நிர்வாகத் தயாரிப்பாளராகவும், தென்னரசு தயாரிப்பு நிர்வாகியாகவும் பணியாற்றியுள்ளனர்.
திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பே இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடத் தேர்வாகியிருப்பது படக்குழுவினருக்குக் கிடைத்துள்ள முக்கியமான அங்கீகாரமாகப் பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, மேலும் பல சர்வதேசத் திரைப்பட விழாக்களுக்கும் இப்படத்தை அனுப்பப் படக்குழு திட்டமிட்டுள்ளது.

பெண்ணுரிமை உள்ளிட்ட சமூக முக்கியத்துவம் வாய்ந்த கருத்துகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘அறிவு’ திரைப்படம், சர்வதேசத் திரைப்பட விழாவில் கிடைத்துள்ள அங்கீகாரத்தால் ரசிகர்கள் மத்தியிலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில் Movietron Production தயாரித்துள்ள ‘அறிவு’ திரைப்படம் வரும் டிசம்பர் 11-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
