ஜி.வி. பிரகாஷ் – கயாடு லோஹரின் ’இம்மார்ட்டல்’ ஓடிடி ரிலீஸ் எப்போ தெரியுமா?

Web Ads

காதல், மர்மம் மற்றும் அமானுஷ்ய திகில் கலந்த கதைக்களத்தில் உருவாகியுள்ள ‘இம்மார்ட்டல்’ திரைப்படம், வரும் அக்டோபர் 30, 2026 அன்று Sony LIV ஓடிடி தளத்தில் வெளியாகிறது. அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா எழுதி இயக்கியுள்ள இப்படத்தில், ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் கயாடு லோஹர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என ஐந்து மொழிகளில் இப்படம் வெளியாகிறது.

சென்னையைப் பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தின் கதையில், அச்சகத்தில் பணிபுரியும் மாகி (ஜி.வி. பிரகாஷ் குமார்) குறைந்த வாடகையில் தங்குவதற்கு ஓர் இடத்தைத் தேடுகிறார். அப்போது சிந்து (கயாடு லோஹர்) என்ற மர்மமான பெண்ணைச் சந்திக்கிறார். தனது ஆடம்பரமான வீட்டில் ஓர் அறையை மிகவும் குறைந்த வாடகைக்கு வழங்கும் சிந்துவின் செயல், முதலில் மாகிக்கு நல்ல வாய்ப்பாகத் தெரிகிறது.

ஆனால், நாட்கள் செல்லச் செல்ல அந்த வீட்டில் நடைபெறும் எதிர்பாராத சம்பவங்கள் மாகிக்கு அச்சத்தை ஏற்படுத்துகின்றன. சிந்துவின் வாழ்க்கையில் மறைந்திருக்கும் ரகசியங்களை அறியத் தொடங்கும் மாகி, தான் எதிர்பார்க்காத பல மர்மங்களை எதிர்கொள்கிறார். எதிர்பாராத சந்திப்புகள், மர்மமான நிகழ்வுகள் மற்றும் அடுத்தடுத்த திருப்பங்களுடன் இப்படத்தின் கதை நகர்கிறது.

தனது கதாபாத்திரம் குறித்துப் பேசியுள்ள ஜி.வி. பிரகாஷ் குமார், மாகி ஒரு சாதாரண மனிதர் என்றும், எதிர்பாராத சூழலில் சிக்கிக்கொள்ளும் அவரது பயணம் ஆர்வம், பயம் மற்றும் குழப்பம் நிறைந்ததாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். பார்வையாளர்களைப் போலவே மாகியும் ஒவ்வொரு சம்பவத்தையும் புதிதாகக் கண்டறிவது இந்தக் கதாபாத்திரத்தைச் சுவாரசியமாக்கியதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், Sony LIV மூலம் ரசிகர்கள் இப்படத்தைப் பார்த்து அதன் மர்மங்களைத் தெரிந்துகொள்ளவிருப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Web Ad 2

இப்படத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார், கயாடு லோஹர் ஆகியோருடன் டி.எம். கார்த்திக், குமார் நடராஜன், லொள்ளு சபா மாறன், ஆதித்யா கதிர், அர்ஷு மகாராஜன், பெமா சாம்சோ மற்றும் சுனிதா ஸ்ரேஸ்தைன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மாரியப்பன் சின்னாவின் முதல் திரைப்படமான ‘Immortal’, மர்மம் மற்றும் அமானுஷ்ய திகில் நிறைந்த கதைக்களத்துடன் ரசிகர்களைச் சந்திக்கத் தயாராகியுள்ளது. இப்படம் அக்டோபர் 30, 2026 அன்று Sony LIV ஓடிடி தளத்தில் பிரீமியர் ஆகிறது.