ஜீவா நடிக்கும் “தகப்பன்” திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

Web Ads

நடிகர் ஜீவா நடிப்பில் உருவாகி வரும் ‘தகப்பன்’ திரைப்படம் வரும் டிசம்பர் 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் எனப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனைப் புதிய போஸ்டருடன் படக்குழு வெளியிட்டுள்ளது.

இயக்குநர் ரா. வெங்கட் இயக்கத்தில், லார்க் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படம், மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைப் பின்னணியாகக் கொண்டு உருவாகி வருகிறது. அப்பா – மகன் உறவு, குடும்பப் பாசம் மற்றும் மனித உணர்வுகளை மையமாகக் கொண்ட குடும்பக் கதையாக இப்படம் உருவாகியுள்ளது.

மதுரையில் படப்பிடிப்பு நடைபெற்றபோது, காட்சிகளை நேரில் பார்த்த பொதுமக்கள் உணர்ச்சிவசப்பட்டுப் படக்குழுவினரைப் பாராட்டியதாகக் கூறப்படுகிறது. இது படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

‘தெனாவட்டு’ படத்திற்குப் பிறகு, முழுக்க முழுக்க கிராமப்புறப் பின்னணியில் ஜீவா நடிக்கும் படமாக ‘தகப்பன்’ உருவாகி வருகிறது. சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற ‘TTT’ திரைப்படத்தைத் தொடர்ந்து, மதுரை மண்ணின் மண்வாசனையுடன் கூடிய கதையில் ஜீவா நடிப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இப்படத்தில் ரஜிஷா விஜயன் கதாநாயகியாக நடிக்கிறார். அனிருத் உள்ளிட்ட முன்னணி இசையமைப்பாளர்களுடன் பணியாற்றிய அனுபவம் கொண்ட சுயாதீன இசைக்கலைஞர் மார்ஷல் ராபின்சன் (Marshall Robinson) இசையமைக்கிறார். கதையின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் அவரது இசை அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Web Ad 2

K. குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு M. சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். நாகூரான் ராமச்சந்திரன் படத்தொகுப்பையும், K.B. நந்தபாலன் கலை இயக்கத்தையும் கவனிக்கின்றனர். சண்டைக் காட்சிகளை மகேஷ் மேத்யூ வடிவமைக்கிறார். ஆடைப் பொறுப்பை M. செல்வராஜும், ஆடை வடிவமைப்பை ரிதேஷ் செல்வராஜும் மேற்கொள்கின்றனர். ஒலிப்பதிவை T. உதய் குமார் கவனிக்கிறார். தேனி அன்பு புகைப்படக் கலைஞராகப் பணியாற்றுகிறார்.

மேலும், R. பாலகுமார் நிர்வாகத் தயாரிப்பாளராகவும், பிரிதிவிராஜா சின்னசாமி விநியோகத் தலைவராகவும், யுவராஜ் மக்கள் தொடர்பாளராகவும், தினேஷ் அசோக் விளம்பர வடிவமைப்பாளராகவும் பணியாற்றுகின்றனர்.

இப்படத்தின் இசை வெளியீட்டு உரிமையை திங்க் மியூசிக் நிறுவனம் பெற்றுள்ளது. மேலும், படப்பிடிப்பு மற்றும் இறுதிக்கட்டப் பணிகள் நிறைவடைவதற்கு முன்பே, சாட்டிலைட் ஒளிபரப்பு உரிமையை ZEE தமிழ் நிறுவனமும், ஓடிடி உரிமையை ZEE5 நிறுவனமும் கைப்பற்றியுள்ளன.

படத்தின் போஸ்டர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்து வரும் வரவேற்பைத் தொடர்ந்து, இறுதிக்கட்டப் பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். குடும்ப உறவுகளையும் உணர்வுகளையும் மையமாகக் கொண்ட ‘தகப்பன்’, டிசம்பர் 24-ம் தேதி வெளியாகி ரசிகர்களைக் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.