மண்டாடி திரை விமர்சனம்

Web Ads

மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் சூரி, சத்யராஜ், மகிமா நம்பியார், சுகாஸ், உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியிருக்கும் திரைப்படம் ” மண்டாடி ” .

காளி (சூரி )… முன்னாள் பாய்மரப் படகு போட்டி வீரன். ஆனால் நிகழ்காலத்தில் ஏதோ ஒரு காரணத்தால் அதில் இருந்து விலகி இருக்கும் முன்னாள் வீரர். எதிர்பாராத சூழல் அவரை மீண்டும் கடலுக்குள் இறங்க வைக்கிறது. அதன்பிறகு நடக்கும் சம்பவங்கள்தான் படத்தின் கதை.

சூரி இந்தப் படத்தில் வழக்கமான சூரியாக இல்லாமல், காளியாகவே தெரிகிறார். அவரது தோற்றமும் உடல் மொழியும் கதாபாத்திரத்துக்கு நன்றாகப் பொருந்துகிறது. குறிப்பாக கடலிலும் படகிலும் நடக்கும் காட்சிகளில் அவரது உழைப்பு தெரிகிறது. உணர்ச்சிக் காட்சிகளிலும் தனது நடிப்பால் கவனம் ஈர்க்கிறார். சாதாரணமாக காமெடி நடிகராக இருந்து ஒருவர் மாஸ் ஹீரோ டெம்ப்ளேட்டுக்குள் வருவது அவ்வளவு சுலபம் அல்ல. ஆனால் சூரி அற்புதமாக அந்த மாற்றத்தை காண்பித்திருக்கிறார். உடல் மொழி, தோற்றம், பார்க்கும் பார்வை உட்பட முந்தைய சூரியன் படங்களிலிருந்து முற்றிலுமாக வேறுபட்டு நிற்கிறது.

சுஹாஸ் எதிர்மறை கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். இத்தனைக்கும் அவர் தெலுங்கு நடிகர் என்றாலும் தமிழின் கடல் சார்ந்த நிலத்திற்கு மிக அற்புதமாக பொருந்துகிறார். மகிமா நம்பியார் கதைக்கு தேவையான உணர்வை அழகாகக் கொடுத்து மத்திம வயது பெண்ணாக நடிக்க சம்மதித்தற்கே பாராட்டுகள். அதிலும் கிளைமாக்ஸ் இல் அவர் நடிப்பு கவனிக்கத்தக்கதாக மாறுகிறது. சத்யராஜும் தனது அனுபவமான நடிப்பால் படத்துக்கு பலம் சேர்க்கிறார்.

Web Ad 2

படத்தின் மிகப்பெரிய பலம் கடலில் நடக்கும் பாய்மரப் படகுப்போட்டி காட்சிகள்தான். பாய்மரப் படகு போட்டியை இவ்வளவு பிரமாண்டமாகவும் நமக்கு நெருக்கமாகவும் காட்டியிருப்பது ரசிக்க வைக்கிறது. படகுகள் வேகமாகச் செல்லும் காட்சிகளும், போட்டியின் பரபரப்பும் திரையில் நம்மையும் அந்தப் போட்டிக்குள் அழைத்துச் செல்கின்றன.

ஜி.வி.பிரகாஷின் பின்னணி இசை போட்டிக் காட்சிகளுக்கு நல்ல வேகம் கொடுக்கிறது. ” உசுரே நீதான் புள்ள ” ஜி. வி. மேஜிக். எஸ். ஆர். கதிர் ஒளிப்பதிவும் கடலின் அழகையும் அதன் ஆபத்தையும் சிறப்பாகக் காட்டியிருக்கிறது.

ஒரு விளையாட்டுப்போட்டி அதில் இருக்கும் பகை அதற்கான பழி தீர்க்கும் படலம் என்பது காலம் காலமாகவே நாம் பார்த்து பழகிய கதைதான். என்றாலும் கதை நடக்கும் களம் புதிதாக இருக்கிறது. முதல் பாதியில் இருக்கும் விறுவிறுப்பு சில இடங்களில் இரண்டாம் பாதியில் குறைகிறது. சில காட்சிகள் நாம் ஏற்கெனவே பார்த்தது போலவும் இருப்பதை தவிர்க்க முடியவில்லை.
கடல், பாய்மரப் படகு போட்டி, சூரியின் நடிப்பு ஆகியவை இந்தக் குறைகளை மறக்கச் செய்கின்றன.

மொத்தத்தில், பழகிய கதை ஆனால் பாய் மரப் படகு போட்டியை சுவாரசியமாக பதிவு செய்து ‘மண்டாடி’ கவனம் ஈர்க்கிறது. அதிலும் பெரிய திரைக்காகவே பல காட்சிகளை உண்மையான சிஜி இல்லாமல் அணுகி உயிரையே பணயம் வைத்து எடுத்திருப்பது சபாஷ் ரகம்.

Mandaadi Movie Review
Mandaadi Movie Review
65%

மண்டாடி திரை விமர்சனம்

மண்டாடி : சூரியின் புத்தம் புது ஆட்டம் !

  • Rating