இந்திய சினிமாவில் யாரும் எழுப்பாத கேள்வியை ‘என்ன விலை’ எழுப்புகிறது – நடிகர் கருணாஸ்

Web Ads

தேசிய விருது பெற்ற திரைப்பட இயக்குநர் சஜீவ் பழூர் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் ‘என்ன விலை’. கலாமயா சினிவெர்ஸ் நிறுவனம் சார்பில் ஜித்தேஷ் விஸ்வம்பரன் மற்றும் அனுகோபால் வேணுகோபாலன் தயாரித்துள்ள இப்படத்தில் கருணாஸ், நிமிஷா சஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். திரைப்படம் வரும் செப்டம்பர் 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்நிலையில், ‘என்ன விலை’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்துகொண்டு திரைப்படம் குறித்தும், படப்பிடிப்பு அனுபவங்கள் குறித்தும் பகிர்ந்து கொண்டனர்.

தயாரிப்பாளர் ஜித்தேஷ் விஸ்வம்பரன் பேசுகையில், “பல சிறிய விஷயங்களுக்கு இந்தப் படம் முன்னுதாரணமாக இருக்கும். படக்குழுவினருடன் ராமேஸ்வரம் மக்களும் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். அந்த உழைப்புக்கான பலனை நீங்கள் வழங்குவீர்கள் என்று நம்புகிறேன்” என்றார்.

நடிகர் கான்ஸ்டபிள் சுந்தரம், “ஜூனியர் ஆர்ட்டிஸ்டாக இருந்த எனக்கு இந்தப் படத்தில் வாய்ப்பளித்த இயக்குநருக்கு நன்றி. நடிகர் கருணாஸ் பெரிய நடிகர் என்ற எந்த அலட்டலும் இல்லாமல் எங்களிடம் இயல்பாகப் பழகினார். படம் நன்றாக வந்திருக்கிறது” என்றார்.

நடிகர் பிரதீப், “இது ஒரு அருமையான படம். எனக்கு வாய்ப்பளித்த இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் அண்ணன் கருணாஸ் ஆகியோருக்கு நன்றி. படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்” எனத் தெரிவித்தார்.

நடிகர் தர்ஷன், “இந்தப் படத்தில் எனக்கு ரைட்டர் கதாபாத்திரம். படம் அனுப்பப்பட்ட அனைத்து விருது விழாக்களிலும் விருதுகளை வென்றுள்ளது. மிகச்சிறந்த வெற்றிப் படமாக இது மாற வேண்டும். அனைவரும் திரையரங்குகளில் வந்து படத்தைப் பார்த்து ஆதரவு அளிக்க வேண்டும்” என்றார்.

நடிகை நிரோஷா, “இந்தப் படத்தில் வாய்ப்பளித்த இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருக்கு நன்றி. நடிப்பு என்பது தெரியாத அளவுக்கு இயல்பாக இருக்க வேண்டும் என்று இயக்குநர் சொல்லிக் கொடுத்தார். உங்கள் அனைவரின் ஆதரவும் தேவை” என்றார்.

நடிகர் கவி, “பல நாடுகளின் விருது விழாக்களில் இந்தப் படம் திரையிடப்பட்டு பல விருதுகளை வென்றுள்ளது. எப்போது நம் நாட்டு மக்களுடன் இந்தப் படத்தைப் பார்க்கப் போகிறோம் என்று ஆவலுடன் காத்திருந்தோம். தற்போது மக்களுடன் இணைந்து இந்தப் படத்தைக் கொண்டாட இருக்கிறோம். முக்கியமான படத்தில் எனக்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் படக்குழுவினருக்கு நன்றி” என்றார்.

நடிகர் பாண்டி, “நீண்ட நாட்களாக இந்தப் படத்திற்காகக் காத்திருந்தோம். வாய்ப்பளித்த தயாரிப்பாளர் மற்றும் இயக்குநருக்கு நன்றி. ‘பசங்க’, ‘கோலி சோடா’ படங்களைத் தாண்டி ஒவ்வொரு படத்திலும் நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்று எதிர்பார்த்தேன். அது இந்தப் படத்தில் நடக்கும் என்று நம்புகிறேன். உங்கள் அனைவரது ஆதரவும் தேவை” எனக் கூறினார்.

Web Ad 2

நடிகை சாஷா, “இயக்குநர் சஜீவ் சார் மற்றும் தயாரிப்பாளர் ஜித்தேஷ் சாருக்கு நன்றி. இப்படத்தில் கதாநாயகனின் தங்கை மணிமேகலை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். கிராமத்துக் கதையில் நடிக்க வேண்டும் என்ற எனது கனவு இந்தப் படத்தின் மூலம் நிறைவேறியுள்ளது. ராமேஸ்வரத்தில் படப்பிடிப்பு நடைபெற்றது. அனைவரும் கடுமையாக உழைத்திருக்கிறோம். இந்தப் படம் 13 விருது விழாக்களில் விருது பெற்றுள்ளது. அனைவரும் திரையரங்குகளில் பார்த்து ஆதரவு அளிக்க வேண்டும்” என்றார்.

இயக்குநர் சஜீவ் பழூர், “ ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’, ‘சூது கவ்வும்’, ‘பண்ணையாரும் பத்மினியும்’ போன்ற படங்கள் சிறிய கருவில் இருந்து கதையாக உருவானவை. தமிழ் எனக்கு மிகவும் பிடிக்கும் என்பதால் ‘என்ன விலை’ படத்தை இயக்கியுள்ளேன். படம் பார்த்துவிட்டு உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்” என்றார்.

“எனது 20 ஆண்டு கால ஆசையை இந்தப் படம் நிறைவேற்றியுள்ளது” – கருணாஸ்

நடிகர் கருணாஸ் பேசுகையில், “2001ஆம் ஆண்டு ராமேஸ்வரத்தில் பாலா அண்ணன் இயக்கிய படத்தில் லொடுக்கு பாண்டியாக நடித்து எனது திரைப்பயணத்தைத் தொடங்கினேன். நான் மலையாளப் படங்களை அதிகம் விரும்பிப் பார்ப்பேன். அதனால் மலையாள எழுத்தாளர்கள், இயக்குநர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுடன் இணைந்து ஒரு படமாவது பணியாற்ற வேண்டும் என்ற ஆசை இருந்தது. அந்த ஆசை இப்போது நிறைவேறியுள்ளது.

இந்தப் படம் சாமானியர்களைப் பற்றிய கதை. அதனால்தான் இயக்குநர் இயல்பான நடிகர்களைத் தேர்வு செய்திருக்கிறார். தற்போது எனக்கு பெரிய அளவில் வியாபாரம் இல்லை என்றாலும், என்னை நம்பி தயாரிப்பாளர்கள் ரூ.7 கோடி முதலீடு செய்திருக்கிறார்கள். அந்த அளவுக்கு கதையின் மீது அவர்களுக்கு நம்பிக்கை இருக்கிறது.

இந்திய சினிமாவில் இதுவரை யாரும் எழுப்பாத ஒரு கேள்வியை இந்தப் படத்தின் மூலம் இயக்குநர் சஜீவ் எழுப்பியிருக்கிறார். எனது 20 ஆண்டு கால ஆசையை இந்தப் படம் நிறைவேற்றியுள்ளது.

அட்வகேட் கதாபாத்திரத்தில் நிமிஷா சஜயன் அற்புதமாக நடித்திருக்கிறார். ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் பொருத்தமானவர்களை இயக்குநர் திறமையாகத் தேர்வு செய்துள்ளார். படம் வெளியாகும் முன்பே நெட்ஃபிக்ஸ் போன்ற முன்னணி ஓடிடி நிறுவனம் படத்தை வாங்கியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

‘நந்தா’ படத்திற்குப் பிறகு என் மனதிற்கு மிகவும் நெருக்கமான திரைப்படம் ‘என்ன விலை’. இத்தனை ஆண்டுகால திரைப்பயணத்தில் என்னுடைய நடிப்பைப் பார்த்து என் மனைவி முதன்முறையாக இந்தப் படத்தில்தான் என்னைப் பாராட்டியுள்ளார். நிமிஷா மேடமும் என்னுடைய நடிப்பைப் பார்த்து பாராட்டியுள்ளார்.

நிச்சயம் இந்தப் படமும், இதில் நான் நடித்துள்ள கதாபாத்திரமும் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்” என்றார்.