இறுதிக்கட்ட படப்பிடிப்பில் துல்கர் சல்மான் – பூஜா ஹெக்டே புதிய திரைப்படம்!

துல்கர் சல்மான் மற்றும் பூஜா ஹெக்டே முதன்முறையாக இணைந்து நடிக்கும் பான்-இந்தியா திரைப்படமான #DQ41 (#SLV10) படத்தின் முக்கியமான படப்பிடிப்பு கட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட பிரத்யேக புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன.
அறிமுக இயக்குநர் ரவி நேலகுதிடி இயக்கத்தில், தயாரிப்பாளர் சுதாகர் செருகூரி தலைமையிலான எஸ்எல்வி சினிமாஸ் நிறுவனத்தின் 10வது தயாரிப்பாக உருவாகும் இப்படம், காதலும் மனித உணர்வுகளும் கலந்த அழகிய பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகி வருகிறது.
பனிமூட்டம் சூழ்ந்த மலைப்பகுதிகளில் நடைபெற்ற சமீபத்திய படப்பிடிப்பு அட்டவணை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. வெளியான புகைப்படங்களில் குளிர்கால உடையில் கவர்ச்சியாக தோன்றும் துல்கர் சல்மானும், ஸ்டைலான தோற்றத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் பூஜா ஹெக்டேவும் இடம்பெற்றுள்ளனர்.
வழக்கமான போஸ் ஸ்டில்களைத் தாண்டி, படப்பிடிப்பு தளத்தின் இயல்பான தருணங்களை பதிவு செய்துள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. மழைத்தூறலில் குடையுடன் சிரித்தபடி இருக்கும் இருவரின் காட்சிகள், பயண உணர்வை ஏற்படுத்தும் மலைப்பகுதி பின்னணிகள் மற்றும் முழு படக்குழுவுடன் கோவில் முன் எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
துல்கர் சல்மான் – பூஜா ஹெக்டே ஜோடி முதல் முறையாக திரையில் இணையும் நிலையில், அவர்களுக்கிடையேயான இயல்பான கெமிஸ்ட்ரி படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது.
ஒளிப்பதிவாளர் அனய் ஓம் கோஸ்வாமியின் காட்சிப்பதிவு, ஜி.வி. பிரகாஷ் குமார் இசை மற்றும் அவினாஷ் கொல்லாவின் கலை வடிவமைப்பு ஆகியவை இணைந்து அழகிய, உணர்வுப்பூர்வமான திரை உலகை உருவாக்கவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
பிரம்மாண்டமான பான்-இந்தியா வெளியீடாக உருவாகும் #DQ41, தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

நடிப்பு: துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே
இயக்கம்: ரவி நேலகுதிடி
தயாரிப்பு: சுதாகர் செருகூரி – எஸ்எல்வி சினிமாஸ்
இசை: ஜி.வி. பிரகாஷ் குமார்
ஒளிப்பதிவு: அனய் ஓம் கோஸ்வாமி
கலை இயக்கம்: அவினாஷ் கொல்லா
மக்கள் தொடர்பு: யுவராஜ்