பிரபு தேவா – வடிவேலு இணையும் ‘பேங் பேங்’ படப்பிடிப்பு நிறைவு!

KRG கண்ணன் ரவி தயாரிப்பில், தீபக் ரவி இணைத் தயாரிப்பில் உருவாகி வரும் ‘பேங் பேங்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது. நடனப்புயல் பிரபு தேவாவும், வைகைப் புயல் வடிவேலுவும் சுமார் 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்துள்ள இந்த படம் ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜோம்பி பின்னணியில் உருவாகும் இந்த திரைப்படம், ஆக்ஷன், காமெடி, ஹாரர் அம்சங்கள் கலந்த முழுமையான கமர்ஷியல் என்டர்டெய்னராக உருவாகி வருகிறது. பிரபு தேவாவின் ஸ்டைலான நடிப்பும், வடிவேலுவின் நகைச்சுவையும் இணைந்து ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
படத்தின் முக்கிய காட்சிகள் மலேசியாவில் 10 நாட்கள் படமாக்கப்பட்டுள்ளன. பிரமாண்டமான விஷுவல்கள் மற்றும் ஜோம்பி உலகத்தை மையமாகக் கொண்ட காட்சிகள் படத்தின் ஹைலைட்டாக இருக்கும் என படக்குழு தெரிவித்துள்ளது.
ஏற்கனவே வெளியான டைட்டில் டீஸரில், ஜோம்பிகளால் சூழப்பட்ட நிலையில் பிரபு தேவா மற்றும் வடிவேலு துப்பாக்கியுடன் தோன்றிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தது.
‘பேங் பேங்’ படத்தை சாம் ரோட்ரிகஸ் எழுதி இயக்குகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு H.C. வேணு ஒளிப்பதிவு செய்கிறார். சுரேஷ் ஸ்டண்ட் காட்சிகளை வடிவமைக்க, ஆண்டனி படத்தொகுப்பை கவனிக்கிறார். கலை இயக்கத்தை டான் பாலா மேற்கொண்டுள்ளார்.
மேலும், ‘அனிமல்’ படத்திற்காக தேசிய விருது பெற்ற Sync Cinema நிறுவனம் சவுண்ட் டிசைனை மேற்கொண்டுள்ளது. அரவிந்த் மேனன் சவுண்ட் மிக்சிங் பணிகளை செய்துள்ளார்.
நடிகர் பப்லு பிரித்திவிராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படம், KRG நிறுவனத்தின் நான்காவது பிரமாண்ட தயாரிப்பாக உருவாகியுள்ளது. இந்தோனேசியாவின் Mount Bromo எரிமலைப் பகுதியில் தொடங்கிய படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்த நிலையில், விரைவில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்க உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
‘பேங் பேங்’ படத்தின் அடுத்தடுத்த அப்டேட்களை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.
