ரஜினி-கமல் இணையும் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறாரா?

ரஜினியுடன் இணைந்து நடிக்கும் படத்தின் இயக்குநர், கதை உள்ளிட்டவை இன்னமும் முடிவு செய்யப்படவில்லை என பட விழா ஒன்றில் கமல் தெரிவித்திருந்தார். இதனிடையில், ரெட் ஜெயன்ட் மூவிஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கவுள்ள படத்தில் கமலுடன் இணைந்து நடிக்கவுள்ளதாக ரஜினியும் தெரிவித்தார்.
தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஜெயிலர்’ இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார் ரஜினி. இப்படத்தின் ஷுட்டிங் நடந்து வரும் நிலையில், அடுத்த வருடம் ஜுன் மாதம் ‘ஜெயிலர் 2’ படத்தினை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.
அதேபோல், கமல் அடுத்ததாக அன்பறிவ் மாஸ்டர் இயக்கவுள்ள படத்தில் நடிக்கவிருக்கிறார். முழுக்க முழுக்க ஆக்சன் படைப்பாக உருவாகவுள்ள இப்படத்துக்கான கதை உருவாக்கும் பணிகள் தற்போது நடந்து வருகிறது. ‘ கமல் 237 ‘ படத்தின் வாயிலாக பிரபல சண்டை கலைஞர்களான அன்பறிவ் மாஸ்டர்கள் கோலிவுட் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாக உள்ளனர். இப்படத்தினை முடித்து விட்டு ரஜினியுடன் இணையவுள்ள படத்தில் கமல் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
உருவாகப் போகும் படத்தினை இயக்கப் போவது யார் என்பது குறித்து இணையத்தில் பல விவாதங்கள் எழுந்தது. இந்நிலையில் ரஜினி, கமல் இணையும் படத்தினை லோகேஷ் கனகராஜ் தான் இயக்கப் போவதாக கூறப்படுகிறது. இதற்காக தயாரிப்பு தரப்பு அவருக்கு ஆபீஸ் ஒன்று போட்டு கொடுத்துள்ளதாகவும், அவர் ஸ்கிரிப்ட் உருவாக்கும் பணிகளில் இறங்கி உள்ளதாகவும் கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது.
மேலும், அடுத்தாண்டு ஷுட்டிங் துவங்கி, 2027 ஆம் ஆண்டு பொங்கலுக்கு இப்படத்தினை ரிலீஸ் செய்வதற்கு படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. ‘கூலி’ படத்தில் நிகழ்ந்த குறைகளை எல்லாம் சரி செய்து ரஜினி, கமல் இணையும் படத்தினை லோகேஷ் கனகராஜ் சிறப்பாக இயக்குவார் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
