ரஜினிக்கும் டி.ராஜேந்தருக்கும் உள்ள நட்பு: தயாரிப்பாளரின் தகவல், வைரல்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள ‘கூலி’ படம் அடுத்த மாதம் 14-ந்தேதி ரிலீஸாக உள்ளது.
இந்நிலையில், படத்தின் முதல் சிங்கிளான ‘சிகிட்டு’ பாடல் வீடியோ வெளியாகி வரவேற்பு பெற்றுள்ளது. அந்தப் பாடலை டி.ராஜேந்தர் பாடியிருந்தார். மேலும், அந்த வீடியோவில் அவர் நடனமும் ஆடியிருந்தது குறிப்பிடத்தக்கது.
வழக்கமான அனிருத் பாடலாக இது அமைந்திருந்தாலும், ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்திருக்கிறது. இச்சூழலில் தயாரிப்பாளர் பாலாஜி பிரபு பேசியிருக்கும் விஷயம் வைரலாகி வருகிறது.
பாலாஜி பிரபு தெரிவிக்கையில், ‘கூலி படத்தில் டி.ராஜேந்தரை பயன்படுத்தினால் என்ன.. என்ற எண்ணம் முதலில் இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்குத்தான் வந்தது. உடனடியாக ரஜினியிடம் இதுபற்றி அவர் கூறினார். அதற்கு ரஜினியோ, ‘டி.ராஜேந்தருக்கு சமீபகாலமாக உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறதே, அவர் எப்படி நடனம் ஆடுவார்’ என கேட்டார்.
இந்த விஷயம் ராஜேந்தருக்கும் தெரியவந்தது. உடனடியாக அவரோ, ‘ரஜினிக்காக நான் எதையும் செய்வேன்’ என்று சொல்லி சம்மதித்தார்.
ஒருமுறை கட்சி ஒன்றிலிருந்து ரஜினிக்கு எதிர்ப்பு பலமாக கிளம்பியது. அப்போது ரஜினிக்கு ராஜேந்தர் தனது முழு ஆதரவை கொடுத்தார். இப்படியொரு நட்பு அவர்களுக்கிடையே இருக்கிறது’ என்றார். இந்த தகவல் தற்போது வைரலாகி தெறிக்கிறது.
