இது தவறான ஒப்பீடு: ‘முத்த மழை’ பாடல் சர்ச்சை குறித்து சின்மயி விளக்கம்..

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள ‘தக் லைஃப்’ படத்தை மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், ரெட் ஜெயன்ட் மூவிஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். படம் நாளை மறுநாள் 5-ந்தேதி ரிலீஸாகிறது.
இந்நிலையில் நடைபெற்ற படத்தின் இசை வெளியீட்டு விழாவில், ‘முத்த மழை’ என்கிற பாடலை மேடையில் சின்மயி பாடினார். அந்த வீடியோ வைரலானது. தமிழில் இந்தப் பாடலை தீ பாடியுள்ள நிலையில், தெலுங்கு மற்றும் ஹிந்தி வெர்ஷனில் சின்மயி பாடியுள்ளார். ரசிகர்கள் பலரும் தீ-யின் ‘முத்த மழை’ பாடலைவிட சின்மயி பாடிய வெர்ஷன் அழகாக இருக்கிறது. மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது என இருவரையும் ஒப்பிட்டு கருத்துகளை பதிவிட்டு வந்தனர்.
இது குறித்துப் பேசிய சின்மயி, ‘என்னையும் தீ-யையும் ஒப்பிட்டு பேசுவது வருத்தம் அளிக்கிறது. நான் பாடிய பாடலுக்கு இப்படி ஒரு வரவேற்பு கிடைக்கும் என நினைக்கவில்லை. தீ-யால் அன்று இசை வெளியீட்டு விழாவிற்கு வர முடியவில்லை. அதனால், அந்த பாடலை நான் மேடையில் பாடினேன். என்னுடைய வேலையை நான் செய்தேன்.
பாடகி தீ-க்கு தனிப்பட்ட குரல் வளம் இருக்கிறது. அவருடைய முகபாவனை யாராலும் கொடுக்க முடியாது. என்னுடைய வெர்ஷனும், அவர் பாடிய வெர்ஷனும் ஒரு மல்யுத்தப் போட்டி நடப்பதுபோல, வலைதளங்களில் சென்று கொண்டிருக்கிறது.
ஒரு கலைஞனாக அவர் பாடிய பாடலை நான் மதிக்கிறேன். என்னுடைய 20 வயதில் இப்படி ஒரு பாடலை என்னால் பாடியிருக்க முடியாது. குரல் நுணுக்கங்களை அடைய நீண்ட கால அனுபவங்களும் எனக்கு ஒரு காரணமாக இருந்தன.
இது எனக்கும் தீ-க்குமான போட்டி அல்ல. அவர் வளர்ந்து வரும் இளம் பாடகி. இன்னும் 15 வருடங்கள் கழித்து அவர் 100 சின்மயி, 100 ஸ்ரேயா கோஷலை விழுங்கும் திறன் பெற்றிருப்பார். அவருக்கென்று ஒரு தனி இடம் இருக்கும். எங்கள் இருவரையும் ஒப்பீடு செய்வது அவசியமற்றதாக நினைக்கிறேன்’ என கூறியுள்ளார்.
