Miga Miga Avasaram

ஒரு தயாரிப்பாளராக அமைதிப்படை 2, கங்காரு படங்களைத் தயாரித்த சுரேஷ் காமாட்சி, ‘மிக மிக அவசரம்’ என்கிற படத்தின் மூலம் இயக்குநராகவும் மாறியுள்ளார்.

இந்தப் படத்தில் ஸ்ரீப்ரியங்கா கதாநாயகியாக நடிக்க ஈ.ராமதாஸ், அரீஷ், முத்துராமன், ஆண்டவன் கட்டளை அரவிந்த், லிங்கா, இயக்குனர்  சரவண சக்தி, வெற்றிக்குமரன், வீகே சுந்தர், சாமுண்டி சங்கர் (அறிமுகம்) மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இயக்குநரும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளருமான சீமான் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.

இந்தப்படம் பெண் காவலர்களின் அவலங்களைச் சொல்லும் படமாக உருவாகி இருக்கிறது.

ஆனால் இந்தப்படம் போலீஸாருக்கு எதிராக எடுக்கப்பட்டுள்ள படமாக இருக்குமோ என்கிற எண்ணம் பலர் மத்தியில் ஓடிக்கொண்டு இருந்தது.

ஆனால் அதை தனது வித்தியாசமான அணுகுமுறையால் உடைத்தெறிந்து விட்டார் இயக்குனர் சுரேஷ் காமாட்சி.

ஆம். காவலர் தினமான நேற்று, சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் சுமார் 2௦௦ பெண் காவலர்களுக்கு இந்தப்படத்தை திரையிட்டு காட்டினார் தயாரிப்பாளரும் இயக்குனருமான சுரேஷ் காமாட்சி.

இந்நிகழ்வு குறித்த விரிவான தகவல்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார் சுரேஷ் காமாட்சி.

“இது ஏதோ பெண் போலீசார் மட்டுமே சந்திக்கும் பிரச்சனைகளை சொல்லும் படம் என்பது போன்ற தோற்றம் உருவாகியுள்ளது.

ஆனால் உண்மை அதுவல்ல.. அனைத்து துறையிலும் பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகளை சொல்லும் கதை தான்.

அந்தவகையில் இந்தப் படத்தின் கதைக்களமாக போலீஸ் துறையை பின்னணியில் வைத்துள்ளோம் அவ்வளவுதான்..

இந்தப்படம் தொடர்பாக அமைச்சர்கள், முதலைமைச்சர் ஆகியோரை எளிதில் அணுக முடிந்தது.

நானும் இயக்குனர் இமயம் பாரதிராஜாவும் இந்தப்படத்தை முதலில் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜு இருவரையும் சந்தித்து படம் பற்றி கோரியதுடன், அவர்களுக்கு திரையிட்டும் காட்டினோம்.

அவர்கள் இருவரும் தமிழக முதலமைச்சரிடம் இந்தப் படம் பற்றி எடுத்து சொன்னார்கள்…

அவர் இந்தப் படத்தை பார்த்தவிட்டு, இந்தப் படத்தில் சொல்லியிருக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண முயற்சிக்கலாமே என கூறி கமிஷனர் விஸ்வநாதன் மற்றும் டிஜிபி ராஜேந்திரன் ஆகியோரிடம் இந்தப்படத்தை பார்க்குமாறு பரிந்துரை செய்தார்.

முதல்வரின் பரிந்துரையின் பேரில் கமிஷனரும் அவரின் கீழ் உள்ள உயரதிகாரிகளை படம் பார்க்க சொல்லிவிட்டு, அதன்பின் சுமார் 2௦௦ பெண் காவலர்களுக்கு இந்தப்படத்தை திரையிட்டு காட்ட அனுமதித்தார்.

படம் பார்த்த அனைத்து பெண் காவலர்களும் இது தங்களுக்கான படம் என ஆராவரமாக படத்தை ரசித்து பார்த்தது மகிழ்ச்சியாக இருந்தது.

இதை பெண் காவலர்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிரான படமாக மட்டும் அவர்கள் பார்க்கவில்லை.

ஒட்டு மொத்தமா பெண்களுக்கு நடக்கும் அநீதிகளுக்கு எதிரான படமாகத் தான் பார்த்தார்கள்.

மேலும் பெருந்தன்மையுடன் இது உண்மையிலேயே தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனை என உயரதிகாரிகள் நினைத்ததால் பெண் காவலர்களை இந்தப்படத்தை பார்க்க வைத்தார்கள்.

தங்களுக்கு எதிரான படம் என அவர்கள் நினைத்திருந்தால் இதை பெண் காவலர்கள் பார்க்க அனுமதித்திருக்கவே மாட்டார்கள் அல்லவா..?

ஒரு படத்தில் சொல்லப்பட்ட பிரச்னைகளை கவனித்துவிட்டு, இதற்கு உடனே நாங்கள் தீர்வு கொடுக்கிறோம் என ஒரு முதலமைச்சர் சொல்லியிருப்பது இந்தப் படத்திற்கு கிடைத்த மிகப் பெரிய அங்கீகாரம்.

அந்த வகையில் தமிழக முதல்வர்,. அமைச்சர்கள் விஜயபாஸ்கர் மற்றும் கடம்பூர் ராஜு, கமிஷனர் விஸ்வநாதன், டிஜிபி ராஜேந்திரன், துணை ஆணையர் பாபு ஐ.பி.எஸ் உள்ளிட்ட உயரதிகாரிகளுக்கு நாங்கள் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம்” என கூறினார் சுரேஷ் காமாட்சி..

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.