Mrs India Universal Earth

மொரீசியஸ் நாட்டில் நடைபெற்ற திருமணமான பெண்களுக்கான அழகி போட்டியில் பங்கேற்று கோவையை சேர்ந்த சோனாலி பிரதீப் என்ற பெண் மிசஸ் இந்தியா யுனிவர்ஸ் எர்த் என்ற பட்டத்தை வென்று கோவை மட்டுமின்றி தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.

கோவை கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த 38 வயதான சோனாலி பிரதீப் கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக சமூக சேவையில் ஈடுபட்டு வருகிறார். இவர் கடந்த 2015,2016 ஆம் ஆண்டுகளில் மிசஸ் கோயமுத்தூர் பட்டத்தையும் 2017 ஆம் ஆண்டு பூனேயில் நடைபெற்ற மிசஸ் இந்தியா தமிழ்நாடு என்ற அழகி போட்டியில் பங்கேற்று டைட்டில் பட்டத்தையும் வென்றுள்ளார்.

அதே வேளையில் திறன் வளர்ப்பு குறித்து கோவையின் பல்வேறு பள்ளி மற்றும் கல்லூரிகளில் இலவச பயிற்சி வகுப்புகளையும் எடுத்து வருகிறார்.இந்த சூழலில் மொரீசியஸ் நாட்டில் கடந்த 12 ம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை நடைபெற்ற மிசஸ் இந்தியா

யுனிவர்ஸ் எர்த் என்ற திருமணமான பெண்களுக்கான அழகி போட்டியில் பங்கேற்ற அவர் அங்கு போட்டியாளர்களாக பங்கேற்ற 41 அழகிகளை எதிர் கொண்டு சிறப்புடன் செயலாற்றி மிசஸ் இந்தியா யுனிவர்ஸ் எர்த் அழகி பட்டத்தை வென்றுள்ளார்.

இதை தொடர்ந்து விமானம் மூலம் கோவை வந்த அவருக்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,இந்த பட்டம் வென்றது தனக்கு மிகவும் மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்தார்.மிசஸ் யுனிவர்ஸ் எர்த் என்ற பட்டத்துடன் பியூட்டி வித் பர்பஸ் என்ற பட்டமும் கிடைத்துள்ளது என்றும் பெருமிதத்துடன் கூறினார்.

மொத்தம் 11 சுற்றுகள் கொண்ட போட்டி தொடரில் உடை உலங்காரம்,சிகை அலங்காரம்,நடை பாவனை,மற்றும் பொது அறிவு உட்பட பல சுற்றுகள் நடைபெற்றதாகவும் அதில் நேர்காணல் சுற்றில் பட்டம் பெற்ற பிறகு என்ன செய்ய போகிறீர்கள் என்ற கேள்விக்கு பெண்கள் முன்னேற்றம் மற்றும் பெண் கல்வி முக்கியத்துவம் மேம்பாடு ஆகியவற்றிற்காக முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றுவேன் என பதிலளித்தது தனது வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்ததாகவும் குறிப்பிட்டார்.

மேலும் ஏற்கனவே மாவட்டம் மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றது இந்த போட்டியில் சுலபமாக போட்டியை சமாளிக்க உதவியதாகவும் அடுத்ததாக மிசஸ் யுனிவர்ஸ் அழகி போட்டியில் பங்கேற்க உள்ளதாகவும் கூறிய அவர்,தனக்கு கிடைத்த இந்த பட்டத்தை கோவை மக்களுக்கு சமர்ப்பிப்பதாகவும் தனது வெற்றிக்கு ஊக்கம் அளித்த தனது குடும்பத்தினர், நண்பர்கள்,மற்றும் தேர்வு குழு ஆகியோருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.