தவெக தலைவர் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு: முழு விவரம்
பட்டமரம் கல்லடி படாது. ஆனால், பழுத்த மரம் கல்லடி படும்தானே. இதில், சொல்லடி படுவது வேறு. இத்தகைய சூழலில், நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார்.
கட்சி தொடங்கிய பின் தமிழ்நாடு முழுக்க சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டிருக்கும் நிலையில், அவருக்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான பாதுகாப்பு வகைகள் பற்றிப் பார்ப்போம்..
இந்தியாவில் குடியரசுத் தலைவர், பிரதமர் தொடங்கி மாநில ஆளுநர்கள், முதலமைச்சர்கள், மிக முக்கிய நபர்கள் என பலருக்கும் பலவிதமான பிரிவுகளில் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது.
இதில் திரைப்பட பிரபலங்களும், பிரபல தொழிலதிபர்களும் அடங்குவர். ஆனால், அது அவரவரின் பதவி மற்றும் அச்சுறுத்தலின் தன்மையை பொறுத்தே மாறுகிறது.
நாட்டின் முதல் குடிமகனான குடியரசுத் தலைவருக்கு பாதுகாப்பை அளிப்பது,180 வீரர்களைக் கொண்ட மெய்க்காவலர் படை. இந்தியாவில் உள்ள மிக முக்கியமான பாதுகாப்பு படை என்றால் அது SPG எனப்படும் ஸ்பெஷல் புரொடக்ஷன் குரூப் தான்.
முன்னாள் இந்திய பிரதமர் இந்திரா காந்தியின் படுகொலைக்கு பின்னர் தான் இந்த SPG எனப்படும் ஸ்பெஷல் புரொடக்ஷன் குரூப் உருவாக்கப்பட்டது. பிரதமர் மற்றும் அவரது நேரடி குடும்ப உறுப்பினர்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் அவர்களின் பாதுகாப்புக்கான பொறுப்பை SPG ஏற்றுக்கொள்ளும்.
துணை ராணுவப் படையில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்களைக் கொண்டு கட்டமைக்கப்பட்ட இந்த அமைப்பு தான், தற்போதைய பிரதமர் மோடிக்கும் பாதுகாப்பை வழங்கிக் கொண்டிருக்கிறது. இந்த பிரிவில் மொத்தம் 3 ஆயிரம் படை வீரர்கள் உள்ளனர்.
SPGக்கு அடுத்தபடியாக வருவது Z+ பாதுகாப்பு பிரிவு. பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் தேசிய பாதுகாப்பு படை, ரயில்வே பாதுகாப்பு படை, மத்திய பாதுகாப்பு படை, மத்திய தொழிற் பாதுகாப்பு படை, இந்தோ திபேத் எல்லை பாதுகாப்பு படை ஆகியவற்றில் இருந்து வீரர்களை தேர்ந்தெடுத்து உருவாக்கப்பட்டது இந்த இசட் பிளஸ் பிரிவு.
முன்னாள் பிரதமர்கள், முன்னாள் குடியரசு தலைவர்கள், கடுமையான அச்சுறுத்தல்களுக்கு உள்ளான தலைவர்கள் ஆகியோருக்கு இந்த பிரிவு பாதுகாப்பை வழங்கி வருகிறது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் இந்த இசட் பிளஸ் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படுகிறது. 5-க்கும் மேற்பட்ட குண்டு துளைக்காத வாகனங்களுடன், 50-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு வழங்கும் இந்த குழுவிற்கு மாதம்தோறும் செலவிடப்படும் தொகை சுமார் 33 லட்சம் ரூபாய் ஆகும்.
தேசிய பாதுகாப்பு படையை சேர்ந்த 6 பேர் மற்றும் காவல்துறையினரை சேர்த்து 22 பேர் பாதுகாப்பு அளிக்கும் பிரிவுக்கு பெயர் இசட் பிரிவு. இது உயிருக்கு ஆபத்து இருக்கும் விஐபி.களுக்கு உளவுத்துறை பரிந்துரை உடன் வழங்கப்படும் பாதுகாப்பு ஆகும்.
1 முதல் 3 ஆயுதம் ஏந்திய வீரர்கள் அந்த விஐபி எங்கு சென்றாலும் உடன் பயணிப்பார்கள். தமிழ்நாட்டில் இசட் பிரிவு பாதுகாப்பு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பிரிவினருக்கு மாதம்தோறும் 16 லட்சம் செலவளிக்கப்படுகிறது.
இதற்கு அடுத்த இடத்தில் ஒய் பிளஸ் பாதுகாப்பு பிரிவு வருகிறது. குறிப்பிட்ட விஐபிக்கு தேசிய பாதுகாப்பு படை வீரர்கள் நான்கு பேர் பாதுகாப்பு அளிப்பார்கள். அதனுடன் 6 பேர் கொண்ட காவல்படை அவர்களது வீட்டிற்கு சுழற்சி அடிப்படையில் பாதுகாப்பு அளிப்பார்கள்.
சல்மான்கான், கங்கனா ரனாவத், ஷாருக்கான் போன்றோருக்கு இந்த பாதுகாப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த பாதுகாப்பு படைக்காக மாதம் தோறும் 15 லட்சம் செலவளிக்கப்படுகிறது.
இதற்கு அடுத்து, ஒய் பிரிவு பாதுகாப்பு வருகிறது. அந்த ஒய் பிரிவு பாதுகாப்புதான் தற்போது தவெக தலைவர் விஜய்க்கு வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த பிரிவில், தேசிய பாதுகாப்பு படையை சேர்ந்த ஒன்று அல்லது இரண்டு வீரர்கள் உள்பட 8 காவலர்கள் இடம்பெறுவார்கள். இந்த பிரிவுக்கு மாதம் 12 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டு வருகிறது.
விஜய்க்கு இந்த பாதுகாப்பு தமிழ்நாட்டில் மட்டும் வழங்கப்படும். விஜய் மீது முட்டை அடிக்க வேண்டும் என்றும் எக்ஸ் தளத்தில் சிலர் பேசியதால், அவர் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதை கருத்தில் கொண்டு மத்திய உள்துறை அமைச்சகம் அவருக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டிருக்கிறது.
இதற்கு அடுத்தபடியாக எக்ஸ் பிரிவு உள்ளது. அது தேசிய பாதுகாப்பு படையினர் யாரும் இல்லாமல் உள்ளூர் காவல்துறையினரை மட்டுமே வைத்து வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.