உடல் எடையைவிட, மன ஆரோக்கியமே முக்கியம்: விஜய் சேதுபதி உத்வேக பேச்சு..
விஜய் சேதுபதி தற்போது சற்று ஸ்லிம்மாக காட்சியளிக்கிறார். தனது எடை குறித்த சுவாரஸ்யமான தகவலையும் பகிர்ந்து கொண்டார். இது குறித்துப் பார்ப்போம்..
மாணவர் ஒருவர் விஜய் சேதுபதியின் உடல் எடை குறைப்பு பற்றி கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த விஜய் சேதுபதி, ‘எடை பார்க்கும் எந்திரத்தை நான் தொடுவதே இல்லை. ஏனென்றால், அதில் உள்ள எண்கள் என்னை மிகவும் சோர்வடையச் செய்யும்’ என நகைச்சுவையாக கூறினார்.
மேலும், ‘எனக்கு எவ்வளவு எடை இருக்கிறது என்பதை விட, நான் எவ்வளவு ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்கிறேன் என்பதுதான் முக்கியம். எண்களில் கவனம் செலுத்துவதை விட, என் உடல் எனக்கு என்ன சொல்கிறது என்பதைக் கேட்கிறேன். நான் உற்சாகமாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தால் எனக்கு அதுவே போதும்’ என்றார்.
கோவிட்-19 ஊரடங்கு காலத்தில் தனது எடை அதிகரித்ததாகவும், அதன் பிறகு உடல்நலம் மற்றும் தனது திரைப்பட வேடங்களுக்காக எடையைக் குறைக்க முயற்சிப்பதாகவும் தெரிவித்தார்.
யாருடைய வற்புறுத்தலுக்காகவோ அல்லது விமர்சனங்களுக்காகவோ அல்ல, எனது சொந்த ஆரோக்கியம் மற்றும் மனநிறைவுக்காகவே எடையைக் குறைப்பதாக தெளிவுபடுத்தினார்.
‘நான் நலமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கவேண்டும் என்பதுதான் என் விருப்பம். மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை விட, எனக்கு என்னைப் பற்றி என்ன தோன்றுகிறது என்பதுதான் முக்கியம் என்ற அவரது வார்த்தைகள் மாணவர்களிடையே வரவேற்பு பெற்றன. விஜய் சேதுபதியின் இந்த நேர்மையான பதில் வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
‘உடல் எடையை விட, மன மற்றும் உடல் ஆரோக்கியமே முக்கியம்’ என்ற அவரது கருத்து அனைவருக்கும், குறிப்பாக இளைஞர்களுக்கு உத்வேகத்தை அளித்துள்ளது. தற்போது அவர் நடிப்பில் ‘ஏஸ்’ திரைப்படம் உருவாகி உள்ளது. இப்படம் வருகிற மே 23-ந்தேதி வெளியாகிறது.
