விஜய்யின் பிறந்தநாள்: தாய் ஷோபா சங்காபிஷேகம், சிறப்பு பூஜை
தளபதி விஜய் இன்று (ஜூன் 22) தனது 51-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு, படக்குழு சார்பில் கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்றே வெளியிடப்பட்டிருந்தது.
அதில், விஜய் போலீஸ் அதிகாரியாக நடிக்க இருப்பது உறுதியாகி உள்ளது. மேலும், விஜய் காக்கிச்சட்டையுடன் உயர் அதிகாரியாக இருப்பது போன்ற புகைப்படம் ஒன்றையும் பகிர்ந்துள்ள படக்குழு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களையும் கூறியுள்ளது.
நேற்று இரவே, வலைதளங்களில் விஜய்க்கு அவரது ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இந்நிலையில், விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது தாயார் ஷோபா சாய்பாபா கோயிலில் சிறப்பு பூஜையை நடத்தியுள்ளார். அந்த வீடியோ இணையத்தில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டு கொரட்டூரில் தாய் ஷோபாவின் விருப்பப்படி சாய்பாபா கோயில் ஒன்றை கட்டிக் கொடுத்தார் விஜய். அங்கு சிறப்பு யாகங்கள், பூஜைகள் நடந்து மகா கும்பாபிஷேகமும் நடைபெற்றது.
பின்னர், அந்தக் கோயிலுக்கு சென்று விஜய் வழிபாடு நடத்தி இருந்தார். விஜய் தீவிர சாய்பாபா பக்தர் என கூறப்படுகிறது. அவர் மும்பை செல்லும் பொழுது மறக்காமல் சீரடி சென்று வருவது வழக்கம் என பலரும் கூறுவர்.
இந்நிலையில் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது தாயார் ஷோபா விஜய்க்காக அந்த கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தி இருக்கிறார்.1008 சங்குகளை வைத்து பூஜை செய்யப்பட்டு சங்காபிஷேகம் நடைபெற்றிருக்கிறது.
மேலும், அவரது ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் ஆலயங்களில் வழிபாடு நடத்தியும், ஏழை எளியவர்களுக்கு உணவு அளித்தும் விஜய்யின் 51-வது பிறந்த நாளை கொண்டாடி வருகின்றனர். அரசியல் பிரபலங்கள், திரைப்பிரபலங்கள், ரசிகர்கள், தொண்டர்கள் பொதுமக்கள் என பலரும் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.