Web Ads

தடைகளை உடைத்து ‘வீர தீர சூரன்’ வென்றானா?: திரை விமர்சனம்

ஒரே இரவில் நிகழும் சஸ்பென்ஸ் திரில்லர் கதை. ஆளாளுக்கு தீரா பகையோடு பழிவாங்கும் நோக்கோடு திரிகிறார்கள். இதில்.. நிறைய கொலைவெறி, கொஞ்சம் குடும்ப சென்டிமென்ட் என சீறி வந்திருக்கிறான் வீர தீர சூரன்.

வழக்கமாக ஒரு திரைப்படம் முதல் பாகம் வந்ததற்குப் பிறகு, இரண்டாம் பாகம் வெளிவரும். இப்படம், மாறுதலாக இரண்டாம் பாகம் முதலில் வெளியாகி வந்திருக்கிறது. இனி தில்லான சூரனின் தூளான வீர வாழ்க்கையை பார்ப்போம்..

‘தூங்கா நகரம்’ மதுரையில், மனைவி துஷாரா விஜயன் மற்றும் குழந்தைகளுடன் மளிகைக் கடை நடத்தி வருகிறார் விக்ரம். முன்னதாக, இவர் ‘தாதா’ ப்ருத்வி இவரின் மகன் சுராஜ் வெஞ்சரமுடு கேங்கில் முக்கிய ரவுடியாக இருந்தவர். தற்போது, சண்டை சச்சரவே வேண்டாமென குடும்பமே முக்கியமாக இருப்பவர். இந்நிலையில், போலீஸ் அதிகாரியான எஸ்.ஜே.சூர்யா கேங்ஸ்டர்களான ப்ருத்வி-சுராஜை என்கவுன்டர் செய்ய திட்டமிடுகிறார்.

இதனைத் தெரிந்து கொண்ட ப்ருத்வி, எஸ்.ஜே.சூர்யாவை போட்டுத்தள்ள விக்ரமிடம் உதவி கேட்டு கெஞ்சுகிறார், விக்ரம் சம்மதிக்கிறார்.

இச்சூழலில் சுராஜை கொல்ல எஸ்.ஜே. சூர்யா கட்டம் கட்டி களத்தில் இறங்க… அதே இரவில் திட்டம் தீட்டி எஸ்.ஜே. சூர்யாவை கொல்ல விக்ரம் குறி வைக்கிறார். இது மிஸ்ஸாகி விடுகிறது. இதை எதிர்பாராத சுராஜுக்கு, விக்ரம் மீது கடும் கோபமும் சந்தேகமும் குமுறுகிறது. இதனால், அவரின் மனைவி, குழந்தைகளை தனது கட்டுப்பாட்டில் வைத்து சுராஜ் மிரட்டுகிறார். இந்நிலையில், போலீஸாருக்கும் கேங்ஸ்டர் கும்பலுக்கும் இடையேயான மோதலில், அவ்வப்போது சடலங்கள் விழுவதும் சர்வ சாதாரணமாய் நிகழ்கிறது.

இந்த இடத்தில் ‘சிங்கம் போல பறந்து வந்த செல்லப் பேராண்டியாக’ பழைய ஃபார்முக்கு மாறுகிறார் விக்ரம். வேறென்ன.. சுராஜை வெட்டி சம்ஹாரம் செய்கிறார். மகனை இழந்த ‘தாதா’ ப்ருத்வி வெகுண்டெழுகிறார், விக்ரமை சுற்றி வளைத்து சாகடிக்க முனைகிறார். அப்போது அங்கே என்ன நடந்திருக்கும் என்பது தெரிந்ததே, ஆனாலும், மாஸ் தீப்பொறி.

படத்தில், முதல் பாதியில் இல்லறத்துக்கே உரிய கெஞ்சல் கொஞ்சலென நகர்ந்து, அப்புறம் நிதானமாய் மர்டர் அக்ரிமெண்ட், பிளாஷ்பேக் லீலை என போகிறது.

இரண்டாம் பாதியில் வெடிகுண்டு, துப்பாக்கி, அரிவாளென தாறுமாறாய் எகிறி ரத்தக் கறைகளாய் நிறைகிறது.

குறிப்பாக, க்ளைமேக்ஸில் கொலை நடுங்கும் அந்த 12 நிமிட சிங்கிள் ஷாட் அருமை, த்ரில்லிங்கான டூர்.

ஸ்கிரிப்டின் ஒவ்வொரு கேரக்டர்ஸின் உணர்ச்சிகளையும் நேர்த்தியான ஸ்கிரீன் பிளேவில் திறம்பட பதித்திருக்கிறார் இயக்குனர் எஸ்.யு. அருண்குமார்.

தேனி.ஈஸ்வரின் கேமராவில், இரவில் சங்கமித்த திருவிழாக் கூட்டத்து காட்சிகள் வசீகரிக்கிறது. சதமடிக்கும் ஜி.வி.பிரகாஷின் பிஜிஎம் சீன் பை சீன் மெகா மிரட்டல்.

எஸ்.ஜே.சூர்யா புதிய பரிமாணத்தில் ஹானஸ்டாய் அசத்தல். சுராஜ் தமிழ் சினிமாவுக்கு கொடூர வில்லனாக நல்ல அறிமுகம். மேலும், துஷாராவின் ரியாலிட்டி அற்புதம்.

சுருக்கமா படம் எப்டினா..”அரிவாள் தவிர்த்து அறிவால் தகர்ப்பதே நல்லதொரு வீரனுக்கு அழகு” என்ற பட்டறிவோடு.. எளிமைக் கோலமாய் அமைதிப் பூங்காவாய் வாழ விரும்புகிறான் சார் இந்த காளி.!

மொத்தத்தில், இந்த படம் ஆக்சன் பிரியர்களுக்கு ஆகச்சிறந்த விருந்து. அவ்வகையில், பகையாளிகளை கூண்டோடு வீழ்த்தி வீரமாய் தீரமாய் வெற்றி நடை போடுகிறான்.. வீர தீர சூரன்.!

60%

வீர தீர சூரன் திரை விமர்சனம்

  • Rating