ரஜினியின் ‘தலைவர்-173’ படத்தை இயக்கும் முயற்சியில் ஆர்.ஜே.பாலாஜி..
ரஜினி நடிப்பில் கமல் தயாரிக்கும் ‘தலைவர்-173’ படத்திலிருந்து சுந்தர்.சி விலகியதை தொடர்ந்து, பலரும் ரஜினியை இயக்குவதற்கு முயற்சி செய்து வருகின்றனர். அவ்வகையில், ரஜினிக்காக ஆர்.ஜே. பாலாஜி கதையொன்றை கூறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தக் கதை, அவர் ஏற்கனவே விஜய்க்கு சொன்னது எனவும், சில காரணங்களால் விஜய் அந்தக் கதையில் நடிக்க முடியாமல் போயிற்று எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில், அதே கதையினை தற்போது ரஜினிக்காக மாற்றம் செய்து கூறவுள்ளார். விஜய்க்காக சொல்லப்பட்ட கதையில், ரஜினி நடிப்பாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தொடர்ந்து ஆக்சன் கதைகளில் நடித்து வரும் நிலையில், ஜாலியான ஸ்கிரிப்ட் ஒன்றில் நடிக்க வேண்டுமென சுந்தர்.சியிடம் கதை கேட்டார் ரஜினி. ஆனால், (கதையில் ஏற்பட்ட சில முரண்பாடுகள் காரணமாக?) ‘தலைவர்-173’ படத்திலிருந்து விலகுவதாக சுந்தர்.சி அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
இந்நிலையில், ஆர்.ஜே. பாலாஜி ஜாலியான திரைக்கதையில் படம் இயக்குவார் என்பதால், ரஜினி-173 படத்தை அவர் இயக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், சூர்யா நடிப்பில் ‘கருப்பு’ படம் இயக்கியுள்ளார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஆன்மீகம் கலந்த கமர்ஷியல் படைப்பாக இப்படம் உருவாகியிருக்கிறது. சூர்யா ரசிகர்கள் மத்தியில் இப்படத்துக்கு எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில், விரைவில் இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது.
இதனிடையில், வெங்கட் பிரபு, கார்த்திக் சுப்பராஜ், உட்பட சில இயக்குநர்களும் ‘ரஜினி-173’ படத்தை இயக்கும் முயற்சியில் உள்ளனர். தலைவர் எதிர்பார்க்கும் கதையானது யாரிடம் இருக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

