திரை ஆளுமையில் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்ததா ‘தக் லைஃப்’?: திரை விமர்சனம்

எதிரி என்பவன் வேற்றுக் கிரகத்திலிருந்து குதிக்கமாட்டான். கூட இருக்கிறவன் தான் எதிரியாவான். மொகலாயர் ஆட்சியிலிருந்து இப்ப வரைக்கும் அதிகாரப்போட்டியென வந்துவிட்டால், அப்பாயென்ன மகனென்ன அண்ணனென்ன தம்பியென்ன; யுத்தக்குருதி தெறிக்கிறது இயல்புதானே.

அதாவது சக்திவேலுவும் அமரனும் அகோரமாய் மோதுகிற-பாசம் குழைந்த அதிகார போர்க்களம்தான்ங்க ‘தக் லைஃப்’ படத்தோட ஒன் லைன்.

டெல்லியில், கேங்ஸ்டர் ரங்கராய சக்திவேல் (கமல்ஹாசன்) போலீஸ் இடையே பரபரக்கும் துப்பாக்கிச் சண்டையில், தவறுதலாக பேப்பர் போடுபவர் இறக்கிறார். இதனால், அவரது மகன் அமரன் (சிம்பு) ஆதரவின்றி நிற்க, தங்கை சந்திரா (ஜஸ்வர்யா லட்சுமி) காணாமல் போகிறார். இந்நிலையில், அமரனை தத்தெடுத்து மகன்போல வளர்க்கிறார் சக்திவேல்.

இச்சூழலில், சக்திவேலுவின் அண்ணன் மாணிக்கத்தின் (நாசரின்) மகள் தற்கொலைக்கு காரணமானவனை கொன்றுவிட்டு, கேங்ஸ்டர் தலைமையை அமரனிடம் ஒப்படைத்து விட்டு சிறைக்குச் செல்கிறார் சக்திவேல். இச்செயலால், மாணிக்கம் மனதுள் காழ்ப்புணர்ச்சி பகையாய் புகைகிறது.

பின்னர் ரிலீஸான சக்திவேல் மீது, ஒரு கட்டத்தில் திடீர்த் தாக்குதல் நடத்தப்படுகிறது. சக்திவேலுவுக்கு அமரன் மீது சந்தேகம் பற்றுகிறது. இதை உணர்ந்து நம்பகமான ‘அமரன்’ சிம்பு மனமுடைந்து உள்ளுக்குள் அனலாகிறார். இச்சூழலில், ஏற்கனவே ஈகோ நிலையில் உறுமிக் கொண்டிருக்கும் ‘மாணிக்கம்’ நாசர் மற்றும் ஜோஜூ ஜார்ஜ் பகவதி ஆகியோர் சிம்புவை திசை திருப்புகின்றனர். ‘சக்திவேல்’ கமலை கொலை செய்ய திட்டமிடுகின்றனர். அவ்வகையில், பனிமலை உச்சியில் மாறி மாறிச் சுடப்பட்டு, அதல பாதாளத்தில் சிம்புவால் தள்ளப்பட்டு, பரிதாபமாய் கமல் இறந்து விடுகிறார்..?

‘இனி ரங்கராய சக்திவேல் இங்கே நான்தான்’ என ஆக்ரோஷமாய் கர்ஜித்து அறிவிக்கிறார் சிம்பு. இதன் பின்னர், அதிரடி திருப்பங்களாய் என்னென்ன நிகழ்கின்றன என்பது மீதிக்கதை.!

படத்தில், ஆடியன்ஸ் கணிக்கின்ற சீன்ஸ் அதிகம். ஆயினும், நேர்த்தியான ஸ்கிரீன் ப்ளே எதிர்பார்க்க வைக்கிறது. இளமை, முதுமை என இரு காலங்களிலும் உடல் மொழியாலும் வாய்மொழியாலும் ரங்கராய சக்திவேலுவாகவே வாழ்ந்திருக்கிறார் கமல். அதேபோல, அவருக்கு இணையாக ஆர்ப்பரிக்கும் அசாத்திய நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் சிம்பு; அபாரம் எனலாம்.

கமலின் மனைவியாக ஜீவா (அபிராமி), நடமாடும் குத்துவிளக்காய் குடும்பப் பாங்குடன் பிரகாசித்து ஈர்த்திருக்கிறார். மும்பையில் 12 வயதில் சிற்றப்பாவால் விற்கப்பட்டவர் இந்திராணி (திரிஷா). இவரை கமல்-சிம்பு இருவருமே அதீதமாய் காதலித்திருக்கிறார்கள். இந்திராணி கதாபாத்திரம் கதைக்கு ஒட்டவேயில்லை. கிளுகிளுப்புக்காக திணிக்கப்பட்டுள்ளதோ என்றே தோன்றுகிறது.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ‘முத்த மழை’ இல்லை. ‘என்ன வேணும் உனக்கு’, ‘ஜிங்குச்சா’ ஸாங்ஸ் சுகம். இரைச்சலில்லா பிஜிஎம் சைலன்ட் மிரட்டல். ஒவ்வொரு டிராஃப்டையும் பலவித கோணங்களில் நிறைவான அழகுடன் ஒளி வார்த்திருக்கிறார் ரவி கே.சந்திரன். எடிட்டிங் என்பது படத்தின் நீளம் பற்றியது அல்ல. சரியான நடிப்பை ஒரு ரிதத்தில் சொல்கின்ற வேலை. அதனை திறம்பட செய்திருக்கிறார் ஸ்ரீகர் பிரசாத்.

‘ஜெயக்குமார் ராயப்பன்’ என்ற போலீஸ் அதிகாரியாய் அசோக் செல்வன் மற்றும் சானியா மல்கோத்ரா சின்ன ரோல்களின் டிராவல்ஸ் பொருத்தமாய் பயணித்திருக்கிறது. இதில், தாதாவாக மஞ்ச ரேக்கர் ரவுடிகளாக வடிவுக்கரசி, சின்னி ஜெயந்த், வையாபுரி ஆகியோரும் வந்து போகிறார்கள்.

38 ஆண்டுகளுக்குப் பிறகு, மணிரத்னம்-கமல் இருவரும் இணைந்து திரைக்கதை எழுதியிருக்கிறார்கள். ‘நாயகன்’ படம்போல அடுத்தவர்கள் படம் எடுக்கட்டும். நாம அடுத்த கட்டத்துக்கு போவோம்- என்பது கமல் நிலைப்பாடு. கலெக்சனை குறி வைத்துப் படம் செய்வது, கற்பனைத் திறனையும் படைப்பையும் பாதிக்கும்- என்பது மணி சார் நிலைப்பாடு.

இவ்வாறான திரையாக்க நோக்கத்தில், ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் உருவான படைப்பில்.. குடும்பம், நட்பு, மகிழ்ச்சி, நாடகம், ஏமாற்றம், துரோகம் எல்லாம் சொல்லப்பட்டிருக்கிறது .

ஆயினும், இப்படம் அடுத்த கட்டத்துக்கு சென்றிருக்கிறதா என்றால்.. ஆம், டெக்னாலஜியில் மட்டுமே.! ‘நாயகன்’ போல எமோஷனலாய் கனெக்ட் ஆகவில்லையே.!

50%

தக் லைஃப் திரை விமர்சனம்

  • Rating