குடும்பச் சண்டைகளுக்கு விவாகரத்து தீர்வாகுமா?: ‘தலைவன் தலைவி’ திரை விமர்சனம்

Web Ads

இருமனம் ஒருமனமாகி நறுமணம் கமழும் நிகழ்வு தானே திருமணம். இந்த இனிய இல்லறத்திற்குள் கருத்து வேறுபாடுகள் எழுவது இயல்பு தானே. இதற்கெல்லாம் மனம் முறிந்து, மணமுறிவுக்காக நீதிமன்றம் நாடுவது முறைதானா?. இதுதான்ங்க படத்தோட கதைக்கரு.

அதாவது, ஹோட்டல் நடத்திவரும் ‘ஆகாசவீரன்’ விஜய் சேதுபதிக்கும் ‘பேரரசி’ நித்யாமேனனுக்கும் திருமணம் நிச்சயமாகிறது. இச்சூழலில், விஜய் சேதுபதியின் குடும்பத்தினர் ரவுடிகள் என நித்யா வீட்டில் தெரியவர, திருமணம் நிறுத்தப்படுகிறது.

இதனையும் மீறி விஜய் சேதுபதியை நித்யா திருமணம் செய்கிறாள். பின்னர், ஹோட்டலின் கல்லாவில் நித்யா அமரும் நிலையில், விஜய் சேதுபதியின் அம்மா-தங்கைக்குள் ஈகோ ஏற்படுகிறது. இதனால், பிரச்சினைகளும் சண்டைகளும் மூள்கிறது.

இருப்பினும் கருத்தொருமித்து வாழும் காதல் தம்பதியினருக்கு பெண் குழந்தையும் பிறக்கிறது. அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை, பண்பும் பயனுமாக பயணித்தாலும், குடும்பத்திற்குள் பனிப்போராக புகையும் பகையுணர்வும் சச்சரவுகளும் தொடர்கின்றன.

ஒரு கட்டத்தில், விஜய் சேதுபதிக்கு வேறொரு பெண்ணை திருமணம் செய்து வைக்க முயல்வதாக அறிந்து, நித்யா பிரிந்து விடுகிறார். இதற்குப் பிறகு இருவரும் மீண்டும் இல்லற வாழ்வில் இணைந்தார்களா? விவாகரத்து பெற்று பிரிந்தார்களா? என்பதே மீதிக்கதை.

படத்தில், ஆகாச வீரன் என்ற கேரக்டராகவே மாறியிருக்கிறார் விஜய் சேதுபதி. அம்மாவுக்கும் மனைவிக்கும் இடையில் நிகழும் சண்டைக் களத்தில் அவரது முகபாவனையும் உடல் மொழியும் நடிப்பது போலவே தெரியவில்லை. அவ்வளவு இயல்பாக ஒன்றியிருக்கிறார்.

நித்யாமேனனின் ‘பேரரசி’ கதாபாத்திரமும் ஆகாச வீரனைப் போன்றதுதான். இந்த கதாபாத்திரத்திற்கு எந்த வரையறையும் இல்லை. இவள் அழகானவள், அன்பானவள், நல்ல மனைவி, அழகான மருமகள் என்று இருந்தாலும் எப்போது எப்படி மாறுகிறாள் என்பதே திரைக்கதையாய் பயணிக்கும் குடும்பச் சித்திரங்கள் எனலாம்.

மேலும் சரவணன், தீபா, செம்பன், வினோத், காளிவெங்கட், ஆர்.கே. சுரேஷ், யோகிபாபு என அனைவரும் அவரவர் கதாபாத்திரமாகவே தனித்த முத்திரை பதித்துள்ளனர்.

சில காட்சிகள் தொய்வாக சென்றாலும், நகைச்சுவை மிகுதியால் ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் பாண்டிராஜ்.

சந்தோஷ் நாராயணனின் இசையில் பாடல்கள் மற்றும் பிஜிஎம் பரவாயில்லை. சுகுமாரின் கேமிரா ஒவ்வொரு ஃபிரேமையும் ஓவியமாய் காட்சிப்படுத்தி இருக்கிறது.

சுருக்கமாக, இப்படம் வலியுறுத்துவது என்னவென்றால், கணவன் மனைவிக்குள் நிகழும் சண்டைகள் இயல்பானதுதான். ஊடலுக்குப் பின் இணையும் கூடல் சுகமானது. இதில், மற்ற உறவுக்காரர்கள் குறுக்கீடு செய்யாமல் இருந்தாலே போதும். குடும்பத்து கோபங்களுக்கு விவாகரத்து தீர்வாகாது என்பதை அழுத்தமாய் இப்படம் உரைத்திருக்கிறது. இது, காதல் மட்டும் பேசும் படமல்ல, வாழ்க்கையின் சிக்கல்களை அவிழ்க்கும் பாடம்.

மொத்தத்தில், உறவுகளின் நுட்பங்களை உணர்வுப்பூர்வமாகவும் உயிரோட்டமாகவும் வார்த்திருக்கின்றனர் இந்த தலைவனும் தலைவியும். ஆம்.. அனைவரும் குடும்பத்துடன் சென்று வரவேற்போம், பூத்தூவி வாழ்த்துவோம்.!

70%

'தலைவன் தலைவி' திரை விமர்சனம்

  • Rating