பவுனுத்தாயான ‘தாய் கிழவி’ ஜொலித்தாரா?: திரை விமர்சனம்

‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா இயக்கிய ‘கிழக்கே போகும் ரயில்’ என்ற படத்தில் ராதிகா நாயகியாக அறிமுகம் ஆனார். பின்னர் ராதிகா படிப்படியாக உயர்ந்து தனித்த நடிப்பாற்றலுடன் விஜயகாந்த், ரஜினிகாந்த், பிரபு என முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து முத்திரை பதித்தார்.

குறிப்பாக, பாரதிராஜா இயக்கத்தில் வெளியான ‘கிழக்குச் சீமையிலே’ என்ற படத்தில் ராதிகா ஏற்ற உணர்வுப்பூர்வ கதாபாத்திரம்; அந்த கலாச்சாரப் பிரதிபலிப்பு இன்றளவும் அவரது பேர் சொல்கின்றது.

இந்நிலையில், பாரதிராஜா ‘ஆத்தா’ என்றொரு படம் இயக்க விரும்பி ராதிகாவை அணுகினார். அப்போது ‘சித்தி’ டி.வி. சீரியலில் நடித்துக் கொண்டிருந்த ராதிகா, ‘என்னை எல்லோரும் இப்போது ‘சித்தி’ என அன்போடு அழைக்கின்றனர். உங்கள் படத்தில் நடித்தால் ‘ஆத்தா’ என கூப்பிடத் தொடங்கி விடுவர்’ என நகைச்சுவையாக தெரிவித்திருந்தார்.

‘மாற்றம்தானே மானுட தத்துவம்’ என்பதுபோல தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில், சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் தாய் கிழவியாக அவதாரம் எடுத்திருக்கிறார். இனி, இப்படம் பற்றிய ஆய்வறிக்கையை பார்ப்போம்..

கிராமத்தில் வட்டிக்காசு வசூலிக்கும் பவுனுத்தாய் ராதிகா. இவரது மிரட்டலுக்கு ஊர்மக்கள் அலறித் தெறிக்கின்றனர். மேலும், இவரின் கர்வ கர்ஜனையில் குடும்பத்தினரும் பயப்படுகின்றனர்.

இச்சூழலில், பக்கவாதத்தால் ராதிகா படுத்த படுக்கையாகி விடுகிறார். ஊர் மக்கள் மகிழ்ச்சியில் திளைக்கின்றனர்.

இந்நிலையில், ராதிகா பதுக்கி வைத்திருக்கும் தங்க நகைகளை பங்கு போட, அவரது மகன்களான சிங்கம் புலி, அருள்தாஸ், பால சரவணன் மூவரும் துடிக்கிறார்கள். அதனால், தங்க நகைகள் இருக்கும் இடம் எங்கே என்ற ரகசியத்தை தெரிந்துகொள்ள ராதிகாவுக்கு வைத்தியம் செய்து காப்பாற்ற (தாய்ப்பாசமாக?) பரபரக்கின்றனர். இதில் ராதிகா பிழைத்தாரா? நகைகள் கண்டுபிடிக்கப்பட்டதா? என்பதே மீதிக்கதை.

‘பவுனுத்தாய்’ என்ற கதாபாத்திரமாகவே மாறியிருக்கிறார் ராதிகா. நடை, உடை, பாவனை, மிடுக்கு பேச்சு என மிக நுட்ப கலையருவி கொட்டியிருக்கிறார்.

குறிப்பாக, பெண்ணியம் பற்றி பேசும்போது பார்வையாளர்களை வசீகரிக்கிறார். இவரது மகன்கள் மூன்று பேரும் நகைச்சுவை முத்தாய்ப்பாய் வலம் வருகின்றனர். எதார்த்த நடிப்பினில் முனீஸ்காந்த் கவர்கிறார். நகை ஆசாரியாக வரும் இளவரசு மற்றும் ‘கெத்து மருமகன்’ முத்துக்குமார் ஆகியோரும் சத்தாக ஈர்த்துள்ளனர்.

விஜயகுமாரின் கேமராவும் நிவாஸ் கே. பிரசன்னாவின் மியூசிக்கும் கதையோட்டத்திற்கு நேர்த்தியாக பொருந்தியிருக்கிறது. சூழலுக்கேற்ப அவ்வப்போது ஒலிக்கும் கமல்ஹாசனின் பாடல்கள் அருமை. யூகிக்க முடிந்த சீன்ஸ், லாஜிக் மீறல்கள் இருந்தாலும் சுவாரஸ்ய காட்சிகளால் திரைக்கதை நிமிர்ந்து நிற்கிறது.

இன்றைய டிஜிட்டல் உலகினில்.. பெண்களுக்கான சுதந்திரம், நம்பிக்கை, பொறுப்புணர்வு, ஆளுமை, வாழ்க்கையை எதிர்கொள்ளும் துணிவு ஆகியவற்றை விதைக்கும் களமாக இயக்குநர் சிவகுமார் முருகேசன் தாய் கிழவியை படைத்துள்ளார்.

அவ்வகையில் ‘பவுனுத்தாய்’ ராதிகா ஜொலித்திருக்கிறார். ‘நடிகவேள்’ எம்.ஆர்.ராதா மகள் நான் என நடிப்புலகில் செழித்திருக்கிறார். ஆம், இவள் கிழவியல்ல; நேசிக்கத் தகுந்த பேரழகி; விருதுகளை அள்ளும் பொன்குமரி.!

80%

'தாய் கிழவி' திரை விமர்சனம்

  • Rating