தமிழகத்தில் ஆளுநர் பதவி தேவையில்லை: விஜய்யின் தவெக மாநாட்டில் தீர்மானம்..
சுயமரியாதையை சீண்டும் ஆளுநர் பதவி தேவையில்லை என தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அரசு, தனியார் துறையில் அரசியல் தலையீடு இருக்கக் கூடாது என்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது. இந்த கூட்டத்தில் கொள்கை விளக்க பாடல் ஒலிபரப்பப்பட்டது. மேலும் உறுதிமொழியும் ஏற்கப்பட்டது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கட்சியின் கொள்கைகள் வாசிக்கப்பட்டது. ஆனால் இந்த கொள்கைகளை தலைவர் விஜய் வாசிக்கவில்லை. அவருக்கு பதிலாக கட்சியின் தொண்டர்கள் இருவர் வாசித்தனர்.
தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டில் தீர்மானங்கள் வெளியாகியுள்ளன. அதில் முக்கியமாக ஒரே நாடு ஒரே தேர்தல், நீட் தேர்வால் நிறைய மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாவதை கண்டித்தும் தேர்தல் நடைபெறுகிறது.
மகளிர் பாதுகாப்பை வலியுறுத்தியும், தமிழகத்தில் அவ்வப்போது உயர்த்தப்படும் மின் கட்டணத்தை கண்டித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளன. அது போல் தமிழக வளர்ச்சிக்கு இரு மொழி கொள்கையே தேவை, கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வலியுறுத்துவோம் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அது போல் சுயமரியாதையை சீண்டும் ஆளுநர் பதவி தேவையே இல்லை. அண்மையில் ஆளுநர் விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய போது, திராவிடர் நல் திருநாடும் என்ற வரியை பாடாமல் விட்டுவிட்டதாக சர்ச்சை எழுந்தது. அது போல் ஆளுநரின் சனாதனம் குறித்த கருத்து, தமிழ்நாட்டை தமிழகம் என பெயர் மாற்றக் கோரிய விவகாரம், நீட் விலக்கு மசோதாவில் கையெழுத்திட மறுப்பது உள்ளிட்ட விவகாரங்களுக்காக அவருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக தெரிகிறது.
அரசு ஊழியர்கள் வாரம் இரு முறை கைத்தறி ஆடை அணிய உத்தரவு பிறக்கப்படும், நீர் நிலைகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும், போதை இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம், மதுரையில் தலைமைச் செயலக கிளை அமைக்கப்படும், அரசு நிர்வாகம் எப்போதும் முற்போக்கு சிந்தனையுடன் இருத்தல் வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது.
தவெக மாநாட்டில் விஜய்க்கு வீர வாள் பரிசாக வழங்கப்பட்டது. வீரவாளின் கைப்பிடியில் இரு யானைகள் இருந்தன. விஜய்க்கு அரசியலமைப்பு சாசனம், பகவத் கீதை, திருக்குரான், பைபிள் ஆகியவை நினைவுப்பரிசாக வழங்கப்பட்டது.