இரண்டு விஷயங்களை நான் செய்யவே மாட்டேன்: சுஹாசினி ‘வைரல்’ வாய்ஸ்..
மணி சார் குறித்து சுஹாசினி தெரிவித்த தகவல்கள் காண்போம்..
மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, திரிஷா நடித்த ‘தக் லைஃப்’ படம் ஜூன் 5-ந்தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. தற்போது டிரெய்லரும் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் மணிரத்னம் குறித்து சுஹாசினி அரிய தகவல்களை பகிர்ந்துள்ளார். அவர் தெரிவிக்கையில், ‘மணிரத்னத்துக்கும் எனக்கும் சரியான புரிதல் இருப்பது இசையில்தான். எங்களை இசைதான் இணைக்கும்.
ஏதேனும் ஒரு கூட்டத்தில் இருக்கும்போது, எனக்கு பிடித்த பாடல் ஒலிபரப்பப்பட்டால் என்னை தேடி பிடித்து உனக்கு பிடித்த பாடலை கேட்டுக்கொண்டிருக்கிறேன் என்பதை உணர்த்துவார். அதேபோல்தான் நானும் செய்வேன்.
அவர் எல்லா விஷயங்களையுமே ரொம்பவே ஈஸியாக எடுத்துக்கொள்வார். நான் அவரிடம் சண்டை போட வேண்டும் என்ற முடிவோடு சென்றால், அந்த சூழ்நிலையையே காமெடியாக மாற்றிவிடுவார்.
எங்கள் தலையில் இடியே விழக்கூடிய விஷயமாக இருந்தாலும்கூட, அதை காமெடியாக மாற்றிய தருணங்கள் எல்லாம் நிறையவே உண்டு. எங்கள் இரண்டு பேருக்கும் இடையே சினிமா ரொம்பவே நெருக்கமான பந்தமாக இருக்கிறது. சினிமாவின் அனைத்து கோணங்களிலிருந்தும் நாங்கள் பேசுவோம்.
ஒரு இயக்குனருடைய மனைவியாக இருக்கும் ஒருவர், அவரது வேலையை விமர்சனம் செய்யாமல் இருப்பதுதான் நல்லது. அதேபோல், கணவரை பற்றி அடுத்தவரிடம் மிக மிக பெருமையாகவும் பேசக்கூடாது. இரண்டு விஷயங்களை எப்போதும் நான் செய்யவே மாட்டேன்.
நம்முடைய துணையானவர் நமது பக்கத்தில்தான் இருக்கிறார். நமது எல்லா முயற்சிகளுக்கும் உறுதுணையாக இருக்கிறார் என்கிற நம்பிக்கையை கொடுக்க வேண்டும். அந்த நம்பிக்கை என் மீது அவருக்கும், அவர் மீது எனக்கும் நன்றாக இருக்கிறது.
என்னுடைய வேலைகளில் அவர் பெரிதாக தலையிடமாட்டார். ஏனெனில், அதை கவனிக்கக்கூடிய அளவுக்குக்கூட நேரம் இல்லாமல் அவர் அவருடைய வேலைகளில் முழுவதுமாக மூழ்கிவிடுவார். அடுத்தவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை எப்போதாவதுதான் பார்ப்பார். அந்த சுதந்திரத்தை நான் அவருக்கு கொடுத்திருக்கிறேன்.
என்னை பொறுத்தவரை, ஒரு கணவர் வேலைக்கு அவசரமாக சென்று கொண்டிருக்கும்போது ‘காஃபி குடித்துவிட்டு செல்லுங்கள்’ என சொல்லும் மனைவி நல்ல மனைவி கிடையாது. ‘நீங்கள் போகும் இடத்தில் காஃபி கிடைக்கும்தானே’ என்று கேட்பவர்தான் நல்ல மனைவி.
சின்ன சின்ன விஷயங்களில் கட்டுப்பாட்டோடு இருந்துவிட்டு, பெரிய விஷயங்களை விடுவதில் எந்த பிரயோஜனமும் இல்லை. ஏதாவது ஒரு விஷயத்தை செய்யப்போகிறேன் என்று அவரிடம் நான் சென்று சொன்னால், ‘செய்யாதே’ என்றுதான் முதலில் சொல்வார். ஏனெனில், அதைவிட பெரிய விஷயங்களை நான் செய்ய வேண்டும் என்று அவர் நினைப்பார்.
அதன் காரணமாகவே ஒரு வேலையை பற்றி அவரிடம் சொல்ல வேண்டுமென்ற சூழ்நிலை வந்தால், அந்த வேலையை பாதி முடித்த பிறகுதான் அவரிடம் சொல்வேன்’ என்றார். சுஹாவின் இந்த ஆஹா வாய்ஸ்.. தற்போது வைரலாகி வருகிறது.
