எதற்கு கேட்க வேண்டும் மன்னிப்பு?: கமலை தொடர்ந்து மணிரத்னம்
தமிழ் சினிமாவில் ‘நாயகன்’ படத்திற்கு பிறகு, மணிரத்னம்-கமல் கூட்டணியில் உருவாகி வெளியான ‘தக் லைஃப்’ படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை.
மேலும், படத்தின் புரமோஷனில் கமல், தமிழில் வந்தது கன்னடம்’ என்ற பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி, கர்நாடாகவில் ரிலீஸ் ஆகவில்லை. போராட்டங்கள் சூழ்ந்தும் கமல் மன்னிப்பு கேட்கவில்லை. பின்னர் நிகழ்ந்த நீதிமன்ற வழக்குகளும் தெரிந்ததே.
இந்நிலையில், ‘தக் லைஃப்’ படம் குறித்து ரசிகர்களிடம் மணிரத்னம் மன்னிப்பு கேட்டதாக வெளியான தகவலுக்கு மெட்ராஸ் டாக்கீஸ் தரப்பு விளக்கம் அளித்துள்ளது.
‘தக் லைஃப்’ படம் பார்த்து ஏமாந்த ரசிகர்களிடம் தான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன் என மணிரத்னம் கூறியதாக ஊடகங்களில் செய்தி பரவியது. பலரும் அதனை பகிர்ந்து வந்தனர்.
இச்சூழலில் ’தக் லைஃப்’ திரைப்பட விவகாரத்தில் மணிரத்னம் யாரிடமும் மன்னிப்புக் கேட்கவில்லை என்றும், அப்படம் ரசிகர்களை திருப்திப்படுத்தவில்லை என்பதால், அவர் மன்னிப்புக் கோரியதாக வரும் தகவல் தவறானது என்றும் மெட்ராஸ் டாக்கீஸ் தரப்பு விளக்கம் அளித்துள்ளது.
ஆக, கமலைத் தொடர்ந்து மணி சாரும் மன்னிப்பு கேட்கவில்லை. அது சரி, மன்னிப்பு என்பது எதனால், யார், யாரிடம் எதற்கு கேட்க வேண்டும்? என திரை ஆர்வலர்கள் விவாதமும் கவனத்திற்கு உரியது தானே.