‘கொட்டுக்காளி’ படத்திற்கு விருது: சிவகார்த்திகேயன் மேலும் உற்சாகம்

‘அமரன்’ சிவகார்த்திகேயன் காட்டில் செம மழை போல. ஆம், தற்போது அவர் தயாரித்த படத்திற்கு விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. அது குறித்த விவரம் பார்ப்போம்..
தமிழ்த்திரையில் முன்னணி நடிகர்களில் ஒருவராக தற்போது வளர்ந்திருப்பவர் சிவகார்த்திகேயன். ‘அமரன்’ படத்தை ஹிட் கொடுத்து மாஸ் ஹீரோக்களில் ஒருவராகியுள்ளார்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வந்த அமரன் படம், உலக அளவில் ரூ.350 கோடிக்கும் அதிகமாக கலெக்ஷனாகி சாதனை படைத்துள்ளது.
மேலும், பன்முக கலைஞராக திகழும் சிவகார்த்திகேயன் எஸ்.கே. புரோடக்ஷன்ஸ் என்ற தனது தயாரிப்பில், சூரியை வைத்து எடுக்கப்பட்ட படம் கொட்டுக்காளி. இயக்குநர் பி.எஸ். வினோத்ராஜ் இயக்கத்தில் சூரி, அன்னா பென் முன்னணி ரோலில் நடித்திருந்தனர். கடந்த பிப்ரவரி மாதம் வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாக நேர்மறையான விமர்சனங்களை பெற்றது.
21 வயதான இளம் பெண் ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த ஒரு பையனை காதலிக்கிறாள். இந்த காதல் வீட்டிற்கு தெரிய, கோபமடைந்த அந்த பெண்ணின் குடும்பத்தினர் மந்திர தந்திரத்தால் அந்த பையனை மறக்க, அருகிலுள்ள கிராமத்துக்கு அழைத்து செல்கிறார்கள்.
இதையடுத்து, அந்தப் பெண்ணிற்கு மாந்திரீகம் செய்யப்பட்டதா? அந்த பையனின் நினைவுகள் அழிக்கப்பட்டதா, இல்லையா? என்பது தான் படத்தின் மீதிக் கதை. படத்தின் கிளைமேக்ஸை ஆடியன்ஸ்க்கு விட்டு விட்டனர்.
இப்படிப்பட்ட கதையை மையப்படுத்திய ‘கொட்டுக்காளி’ திரைப்படம் தற்போது சர்வதேச விருது ஒன்றை வென்றுள்ளது.
இந்தோனேஷியாவில் நடைபெற்ற அல்டர்நேட்டிவா திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நவம்பர் 22 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரையில் நடைபெற்றது. உலகம் முழுவதும் பல மொழிகளில் சிறந்த படங்கள் தேர்வு செய்யப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில் இந்த ஆண்டுக்கான சிறந்த படமாக சூரியின் கொட்டுக்காளி படம் தேர்வு செய்யப்பட்டு நேட்டிவா விருது வழங்கப்பட்டது.
ஏற்கனவே, அமரன் படத்தால் ஒட்டுமொத்த உலகமும் சிவகார்த்திகேயனை கொண்டாடி வரும் நிலையில், இப்போது அவர் தயாரிப்பில் வந்த படத்துக்கு நேட்டிவா விருது வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து பேசிய சிவகார்த்திகேயன், ‘கொட்டுக்காளி படம் நேட்டிவா விருது வென்றிருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். எங்களது பயணத்திற்கு ஆதரவளித்த உங்கள் அனைவருக்கும் நன்றி’ என தெரிவித்துள்ளார்.
“அமரனுக்கு முன், அமரனுக்கு பின்” என சிவகார்த்திகேயனின் திரைப் பயணம் அமைந்து கொண்டிருக்கிறது; வாழ்த்துகள்.!
