நாஞ்சில் நாட்டைச் சேர்ந்த ‘இரண்டாம் சௌத்ரி’ டாக்டர். பசலியான் நசரேத்: இயக்குநர் பி.சி. அன்பழகன் நம்பிக்கை

இந்திய பாரம்பரிய கலை இலக்கிய பேரவை சார்பில் சிவனி சதீஷ் நடத்திய சுதந்திர தின விழாவில், குமரி மாவட்டத்தைச் சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளர் டாக்டர். பசலியான் நசரேத் அவர்களுக்கு விருது வழங்கி, இயக்குநர் நாஞ்சில் பி.சி.அன்பழகன் பேசியதாவது:
‘தமிழ்த் திரையுலகில் லவ்வர்ஸ், குட் நைட், டூரிஸ்ட் ஃபேமிலி ஆகிய வெற்றிப் திரைப்படங்களின் தயாரிப்பாளர் டாக்டர் பசலியான் நசரேத் நாஞ்சில் நாடு குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். இந்த மாவட்டத்திற்கென தனி பெருமைகள் உண்டு. இலக்கியத்திற்கு வள்ளுவர், தொல்காப்பியர். சினிமாவுக்கு என்.எஸ். கிருஷ்ணன் என்று நீண்ட நெடிய வரலாறு உண்டு.
மலையாள சினிமாவின் தந்தை ஜே.சி.டேனியல் நாடார் 100 வருடங்களுக்கு முன்பு மலையாள சினிமாவில் ‘விகித குமாரன்’ என்றொரு படம் எடுத்தார். அந்த காலத்தில் நடிகை கிடையாது. அந்த காலகட்டத்தில் சாதி பிரச்சினைகள் பெரிதாக இருந்த சமயத்தில் படத்தை வெளியிடும்போது தகராறாகி தியேட்டர் கொளுத்தப்பட்டது.
குமரி மாவட்டத்தில் அகஸ்தீஸ்வரத்தைச் சேர்ந்த இவர், மிகவும் கஷ்டப்பட்டு ஒரு தமிழனாக இருந்து மலையாள திரைப்படத்தை எடுத்தார். இதனை பிரச்சினையாக்கி இவரை ஏழையாக்கி ஊருக்கு அனுப்பி விட்டனர். தனது வாழ்நாள் பணத்தையெல்லாம் சொத்தையெல்லாம் விட்டுவிட்டார். இன்று, இவரது பெயரிலேயே மலையாள சினிமாவில் வழங்கப்படும் சிறந்த விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்படுகிறது.
இந்த பெருமைக்குரியவர், முதன் முதலில் மலையாள சினிமாவிற்கு தந்தையாக திகழ்ந்தவர் ஜே.சி.டேனியல் நாடார். பின்னர், பல வருடங்களுக்குப் பிறகு கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் வந்தார். பல படங்கள் எடுத்தார். நிறைய கலைஞர்களை அறிமுகப்படுத்தினார்.
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் கூட, ‘தனது தர்மச்செயல்களை கலைவாணரிடம் இருந்துதான் கற்றுக்கொண்டேன்’ என கூறியிருக்கிறார். கலைவாணர் தனது வாழ்நாள் முழுவதும் தர்மம் செய்தவர். புரட்சித்தலைவரும் அவ்வழியிலேயே வாழ்ந்தவர். அவரும் குமரி மாவட்டத்திற்கு சினிமாவில் வெற்றி தான். கே.வி. மகாதேவன் இசையில் வந்தார். அவரும் வெற்றி. மறுபடியும் 70 வருடங்களுக்குப் பிறகு.
இதற்கிடையில் 25 வருடங்களுக்கு முன்பு நான், காமராசு, அய்யா வழி, நதிகள் நனைவதில்லை என மூன்று படங்கள் இயக்கினேன். இதில், காமராசு படம் வெற்றி. மற்ற இரண்டு படங்களும் தோல்விதான். அதனுடைய சூழலை தற்போது சொல்ல விரும்பவில்லை.
ஆனால், டாக்டர் பசலியான் நசரேத் தொடர்ந்து மூன்று படங்கள் தயாரித்து வெற்றி பெற்றிருக்கிறார். இது எங்களுடைய மாவட்டத்திற்கு கிடைத்த பெருமை. மண்ணின் மைந்தர் என்று பெருமைப்பட்டுக் கொள்ளலாம். மழை விழும்போது மண் எப்படி மணக்கிறதோ, அவ்வாறு குமரி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்திருக்கிறார். அவருக்கு இந்திய பாரம்பரிய கலை இலக்கியப் பேரவை விழா குழு சார்பாக, நான் விருது வழங்குவதில் பெருமையடைகிறேன்.
அவரும் அவருடைய மகனும் பல திரைப்படங்கள் தயாரித்து, மேலும் பல புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்குவார்கள் என முழுமையாக நம்புகிறேன். ஏனெனில், இதுவரை எடுத்த மூன்று படங்களில் மூன்று இயக்குநர்களை அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள். இப்போதும் புதிய இயக்கநர்களை அறிமுகப்படுத்த தொடர்ந்திருக்கிறார்கள். எனக்கு ரொம்ப சந்தோஷம்.
‘சூப்பர் குட் பிலிம்ஸ்’ தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரி புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுப்பார். அந்த வழியில் வந்தவன் நான். இவரும் அதே பாணியில் இரண்டாம் சௌத்ரியாக செயல்படுகிறார். நன்றி வாழ்த்துகள். இவ்வாறு இயக்குநர் நாஞ்சில் பி.சி.அன்பழகன் பேசினார்.
