ரெஜினா கசாண்ட்ரா – நாசர் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் ஜி ஸ்குவாட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இயக்குநர் விஷால் வெங்கட் இயக்கத்தில் ரெஜினா கசாண்ட்ரா, நாசர் உள்ளிட்டோர் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வீடியோவையும் படக்குழு வெளியிட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைக்களங்களைக் கொண்ட திரைப்படங்களைத் தொடர்ந்து தயாரித்து வரும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம், ஜி ஸ்குவாட் நிறுவனத்துடன் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளது. படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், இப்படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மற்றும் திரையுலக வட்டாரங்களில் அதிகரித்துள்ளது.
இயக்குநர் விஷால் வெங்கட், அர்ஜுன் தாஸ் நடிப்பில் வெளியான ‘பாம்’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். தொடர்ந்து விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வரவேற்பைப் பெற்ற ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ திரைப்படத்தையும், ‘ஒரு கோடை மர்டர் மிஸ்டரி’ இணையத் தொடரையும் இயக்கியுள்ளார்.
இப்படம் குறித்து இயக்குநர் விஷால் வெங்கட் கூறுகையில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஆகியோருடன் இணைந்து பணியாற்றியது பெருமையான அனுபவம் என்றும், நடிகை ரெஜினா கசாண்ட்ராவின் அர்ப்பணிப்பு படப்பிடிப்பு முழுவதும் தனக்கு ஊக்கமளித்ததாகவும் தெரிவித்தார். நடிகர் நாசர் தனது கதாபாத்திரத்திற்கு உயிரூட்டியுள்ளதாகவும், ரமேஷ் திலக், ஸ்ரீஜா ரவி உள்ளிட்ட கலைஞர்கள் சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டார். மேலும், படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்றார்.

ஜி ஸ்குவாட் நிறுவனத்தின் தயாரிப்பாளரும் இயக்குநருமான லோகேஷ் கனகராஜ் பேசுகையில், விஷால் வெங்கட்டின் இயக்கத் திறமையும், அவரது கற்பனைத் திறனும் தன்னை எப்போதும் ஊக்கப்படுத்துவதாகக் குறிப்பிட்டார். கதை விவாதம் முதல் தயாரிப்பு மற்றும் இறுதிக்கட்டப் பணிகள் வரை அவருடன் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சியான அனுபவம் என்றும், ரசிகர்களுக்கு ஒரு முழுமையான திரையரங்க அனுபவத்தை வழங்க ஆவலுடன் காத்திருப்பதாகவும் தெரிவித்தார்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பாளர்களான நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் கூறுகையில், தமிழ் சினிமாவில் தங்களது பயணம் சிறப்பாக அமைந்துள்ளதாகவும், இயக்குநர் விஷால் வெங்கட் திட்டமிட்டபடி குறித்த நேரத்தில் படப்பிடிப்பை நிறைவு செய்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும் தெரிவித்தனர். இப்படம் குறித்த கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியாகும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
