சர்வதேச கடத்தல் கும்பலுடன் நடிகை ரன்யாராவ் தொடர்பு
திருமணமான ஒரே மாதத்தில் ரன்யாராவை விட்டு பிரிந்துவிட்டதாக கணவர் தெரிவித்துள்ளார். இது பற்றிய தகவல்கள் காண்போம்..
நடிகை ரன்யா ராவ், துபாயிலிருந்து 14.8 கிலோ தங்கத்துடன் பெங்களூரு விமான நிலையம் வந்த நிலையில் போலீஸார் கைது செய்தனர்.
இதையடுத்து, அவரின் வீட்டில் சோதனை மேற்கொண்டபோது, ரூ.2.67 கோடி ரொக்கப் பணமும், ரூ.2.06 கோடி மதிப்புள்ள தங்க நகைகளும் கண்டுபிடிக்கப்பட்டன. ரன்யா ராவை விசாரித்தபோது, அவர் சர்வதேச தங்கக் கடத்தல் ஈடுபட்டதை போலீசார் கண்டறிந்தனர்.
இந்த வழக்கில் தான் கைது செய்யப்படுவதை தடுக்க ரன்யா ராவின் கணவர் ஜதின் ஹுக்கேரி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவர் தனது மனுவில், ‘தன்னை கைது செய்வதை தடுக்கவும், தன்மீது எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்வதை தடை செய்யவும் கோரியிருந்தார்.
ரன்யா ராவும் ஜதின் ஹுக்கேரியும் கடந்த 2023-ம் ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் செய்துகொண்டனர். ஆனால், அந்த திருமணம் ஒரு மாதம் மட்டுமே நீடித்துள்ளது, 2023 டிசம்பர் மாதத்தில் அவர்கள் பிரிந்துவிட்டனர் ஜதின் ஹுக்கேரி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
இதனை விசாரித்த நீதிமன்றம், ஜதின் ஹுக்கேரி மீது மார்ச் 24 வரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என தீர்ப்பு வழங்கியது. கர்நாடக மாநில அரசு, இந்த வழக்கின் சிறப்பு விசாரணைக்கான குழுவை அமைத்து, டிஜிபி ராமசந்திர ராவை விசாரித்துள்ளது.
ரன்யா ராவின் குடும்ப உறுப்பினர்களுக்கும் தங்கக் கடத்தலில் தொடர்பு உள்ளதா என்பதை கண்டறியவே இந்த விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மேலும், இந்த விசாரணை அறிக்கை இரண்டு நாட்களில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரன்யா ராவிடம் விசாரணை மேற்கொண்டதில் அவருக்கு சர்வதேச தங்க கடத்தல் கும்பலுடனும், பெங்களூருவில் உள்ள முக்கிய புள்ளிகளுடனும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.
இதையடுத்து, பெங்களூருவில் உள்ள ஸ்டார் ஓட்டல் உரிமையாளரான தருண்ராஜ் இந்த தங்க கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையினரும் ரன்யா ராவ் மீது வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்னதாக ரன்யாராவ் ‘தங்கம் கடத்தவேயில்லை’ என அந்தர்பல்டி அடித்தது குறிப்பிடத்தக்கது.