ராம்சரண்- நானி இருவரின் படமும் நேருக்கு நேர் மோதல்: பாக்ஸ் ஆபீஸில் முந்துவது யார்?
இரண்டு முன்னணி நடிகர்களின் படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆவதால், ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
அதாவது, ஷங்கர் இயக்கிய ‘கேம் சேஞ்சர்’ படம் சரிவை தந்த பிறகு ராம் சரண் அடுத்ததாக வெற்றி பெறும் முனைப்பில் இருக்கிறார். இந்நிலையில், ‘புஷ்பா’ பட இயக்குனர் சுகுமாரின் உதவி இயக்குனர் புச்சி பாபு இயக்கிய ‘உப்பனா’ படம் வரவேற்பு பெற்ற நிலையில், புச்சி பாபுவுடன் ராம்சரண் கூட்டணி சேர்ந்துள்ளார்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படம் 2026 மார்ச் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரிலீஸ் வீடியோவில் ராம்சரண் மூர்க்கத்தனமான கெட்டப்பில் கிரிக்கெட் பேட்டை கையில் சுழற்றி, கிரிக்கெட் விளையாடுவது போன்று இருக்கிறது. ‘உப்பனா’ படத்தை போன்று உண்மை சம்பவத்தை தழுவி உருவாகும் படம் என கூறப்படுகிறது.
தமிழில், கடந்த ஆண்டு வெளியான ‘லப்பர் பந்து’ படத்தில் அட்டகத்தி தினேஷ் நடித்த ‘கெத்து’ கதாபாத்திரம் பெரிய வரவேற்பை பெற்றது. அதேபோன்று, ராம் சரணும் கிரிக்கெட் மட்டையை சுழற்றி மைதானத்திற்குள் நிற்கிறார். மைதானம் முழுக்க ரசிகர்கள் பட்டாளம் நிறைந்து காணப்படுகிறது. அப்போது பந்தை விரட்டி அடிக்கும் காட்சிகளும் இடம்பெறுகின்றன.
கிரிக்கெட் போட்டியை மையமாக வைத்து ‘பெத்தி’ படம் உருவாகிறது என்பது படத்தின் வீடியோ மூலம் தெரிகிறது. அப்படியென்றால், “கெத்து” கதாபாத்திரம்தான் “பெத்தி” என உருவாகிறதா? எனவும் நெட்டிசன்ஸ் கமெண்ட்ஸ் தெரிவிக்கின்றனர்.
இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், ‘பெத்தி’ படம் ரிலீஸாகும் மார்ச் 27-ம் தேதி நானி நடித்திருக்கும் ‘பாரடைஸ்’ படமும் ரிலீஸாகிறது. ஆக, இரண்டு முன்னணி நடிகர்களின் படங்கள் ஒரே நாளில் மோதுவதால், பாக்ஸ் ஆபீஸில் முந்துவது யாரென்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது. பார்க்கலாம்..
