கோடிக்கணக்கில் சம்பளம் பெறும் நடிகர்களின் அலட்சியம்: திருப்பூர் சுப்ரமணியம் வருத்தம்

‘தமிழ் சினிமா அழிவிற்கு மாதவன் போன்றவர்கள் காரணமாகி விடக்கூடாது’ என கூறியுள்ளார் தயாரிப்பாளர். இது குறித்த விவரம் காண்போம்..
பல எதிர்பார்ப்புகளை பொருட்படுத்தாமல், ஓடிடி தளத்தில் திரைப்படத்தை நேரடியாக ரிலீஸ் செய்ய நடிகர் சூர்யா முக்கிய உதாரணமாக இருக்கிறார் என கூறப்படுகிறது.
கொரோனா காலத்தில் ‘ஜெய்பீம்’ வெளியிடப்பட்டது. அதேபோன்று பா.ரஞ்சித் ‘சார்பட்டா பரம்பரை’ படத்தையும் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியிட்டார். அப்போது திரையரங்க உரிமையாளர்கள், சூர்யா, பா.ரஞ்சித்தை கடுமையாக விமர்சித்து பேசினர். சினிமாவிற்கு அழிவு காலம் என்றும் விமர்சித்தனர்.
கொரோனா காலத்தில் பொருளாதார பாதிப்பால், பல திரையரங்குகளுக்கு மூடுவிழாவும் நிகழ்ந்திருக்கிறது. காரணம், மால்களின் அதிகரிப்பால் திரையரங்குகள் கல்யாண மண்டபங்களாக மாறிவிட்டதாகக் கூறப்பட்டது.
தற்போது, நயன்தாரா-மாதவன் நடிப்பில் ‘டெஸ்ட்’ படம் ஓடிடியில் வெளியாகி வரவேற்பை பெற்றாலும், இதற்கு தற்போது எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. இது குறித்து, திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் கூறியதாவது,
‘தமிழ் சினிமா அழிவிற்கு மாதவன் போன்றவர்கள் காரணமாகி விடக்கூடாது. திரையரங்கிற்கு வந்த பிறகே ஓடிடி தளத்திற்கு படங்கள் ரிலீஸ் செய்யப்படுகிறது.
ஆனால், மாதவன் நடித்த படம் ஓடிடி தளத்தில் வெளியாகியிருப்பது அதிருப்தியை தருகிறது. திரையரங்கை காக்க ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா போன்ற பெரிய நடிகர்கள் வருடத்திற்கு 2 படங்கள் நடிக்க வேண்டும் .
கடந்த 10 வருடத்திற்கு முன்பு, ஒரு வருடத்தில் பெரிய நடிகர்கள் 3 படத்தில் நடித்தனர். தற்போது வணிகத்தை மையப்படுத்தி ஒரு படத்தில் மட்டும் நடிப்பது சரியா என்பது தெரியவில்லை. இந்த நிலை மாறவேண்டும்.
கோடிக்கணக்கில் சம்பளம் பெறும் ஹீரோக்கள் அலட்சியமாக இருக்கின்றனர். சினிமாவை நம்பி பல குடும்பங்கள் இருக்கிறது. சினிமாவை அழியும் நோக்கில் இருப்பதை தவிர்க்க வேண்டும்’ என வலியுறுத்தியுள்ளார். இதனை கவனத்தில் கொண்டு, பிரபல நடிகர்கள் கடைப்பிடிப்பார்களோ?