மாறாத எனது வேகமும் ஸ்டைலும்: ரஜினி பேச்சு, வைரல்..
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான ‘வேட்டையன்’ படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. அடுத்ததாக கூலி படமும், ஜெயிலர்-2 படம் வெளியாக உள்ளது.
ரஜினிகாந்த்தின் ஸ்பெஷல் என்றாலே அவரது ஸ்டைல், வேகமான நடை, பாவனைதான். ‘பாட்ஷா’ படத்தில் அவருடன் நடித்த நடிகர்கள் தங்கள் அனுபவத்தை ஒருமுறை பகிர்ந்தபோது, ‘அந்தப் படத்தின் ஷூட்டிங்கில் ரஜினி வேகத்துக்கு எங்களால் நடக்க முடியவில்லை’ என தெரிவித்திருந்தது நினைவுகூரத்தக்கது.
அதுமட்டுமின்றி, இப்போது 74 வயது ஆனாலும், அதே வேகம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதனால், அனைவரும் ஆச்சரியத்தில்தான் இருக்கிறார்கள். எந்த நடிகர் வந்தாலும் ரஜினியின் ஸ்டைலை ஃபாலோ செய்வதே அதிகம். அந்த அளவுக்கு ரஜினியின் ஸ்டைல் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்நிலையில், முன்னதாக ரஜினிகாந்த் கொடுத்த ஒரு பேட்டி தற்போது வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ‘நான் ஸ்டைல் செய்கிறேன் என்று உண்மையிலேயே எனக்கு தெரியாது. ஒருமுறை பாலசந்தர் என்னை அழைத்து, ‘மூன்று படங்கள் முடித்துவிட்டாய்.
உன்னுடைய வேகமும், இந்த ஸ்டைலும்தான் உனது ப்ளஸ். இனி வருபவர்கள் எல்லாம் இந்த ஸ்டைலையும், வேகத்தையும் மாற்ற சொல்வார்கள். ஆனால், அதை நீ எந்தக் காலத்திலும் மாற்றிவிடாதே. அதுதான் உன்னுடைய ப்ளஸ். இதைத்தான் யாரும் செய்யவில்லை’ என கூறினார். அதிலிருந்து இப்படியே தொடர்ந்துவிட்டது’ என தெரிவித்துள்ளார் சூப்பர் ஸ்டார். இதே வேகத்தில் ‘கூலி’ படம் அடுத்த மாதம் 14-ந்தேதி ரிலீஸாகிறது.
